எனது ஓட்டல் அறை சோதனை இடப்பட்டது : முன்னாள் முதல்வர் பரபரப்பு அறிவிப்பு!

கமதாபாத்

முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெக்லாத் தனது ஓட்டல் அறைகள் சோதனை இடப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அஷோக் கெக்லாத் ஆவார். காங்கிரஸ் கட்சியை சார்ந்த இவர் படேல் இனத் தலைவரான ஹர்திக் படேல் மற்றும் ஜிக்னேஷ் மேவானி  ஆகியோரையும் சமீபத்தில் சந்தித்துள்ளார்.   அதன் பிறகு தனது ஓட்டல் அறை சோதனை இடப்பட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடுள்ளார்.

அந்தச் செய்திக் குறிப்பில் அவர் கூறி உள்ளதாவது :

“நான் ஹரிதிக் மற்றும் ஜிக்னேஷை உம்மத் ஓட்டலில் சந்தித்தேன்.   உடனே கண்காணிப்புத் துறையினர் எனது ஓட்டல் அறைகளை சோதனை இடுகின்றனர்.  நரேந்திர மோடிஜி,  காந்தியின் குஜராத்தில் என்ன நடக்கிறது” என தன் செய்திக் குறிப்பில் கூறி உள்ளார்.

அடுத்த பதிவில், “நான் எனது பெயரில் பதிவு செய்த அனைத்து ஓட்டல் அறைகளும் சோதனை இடப்பட்டன.   நாங்கள் அவர்களை எதிர்காலத்திலும் சந்தித்துக் கொண்டு தான் இருப்போம் என வெளிப்படையாக கூறுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கடுத்த பதிவில் ஹர்திக் படேல் மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் குற்றவாளிகளா ? அல்லது ஒளிந்திருக்கிறார்களா? இதை உடனடியாக பா ஜ க தெளிவுபடுத்த வேண்டும்” என சொல்லி உள்ளார்.

மேலும், அவர்கள் பா ஜ க தலைவர்களை சந்திக்கும் போது மட்டும் ஓட்டல் அறைகள் ஏன் பரிசோதனை செய்யப்படவில்லை என் றும்,  சிசிடிவி பதிவுகளை எதற்கு கண்காணிப்புத் துறையினர் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் தனி உரிமை என்பது ஜெய் ஷாவுக்கு மட்டுமே உள்ளதா எனவும் கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார்.

ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வரின் அறைகளே மற்றொரு மாநிலத்தில் இது போல சோதிக்கப்படுவது அரசியல் உலகில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.