டில்லி

மோடி மற்றும் அமித்ஷாவின் சர்சைக்குரிய தேர்தல் பேச்சுக்களுக்கு 5 முறை தேர்தல் ஆணையர் லவசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. இந்த நன்னடத்தை விதிகளை மீறும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உண்டு. அவ்வகையில் மாயாவதி, உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிடோருக்கு தேர்தல் பிரசாரம் செய்ய இடைக்கால தடைகள் விதிக்கப்பட்டன.

இந்த விதி மீறல் புகார்கள் பாஜக மீது அதிக அளவில் எழுந்துள்ளன. குறிப்பாக ராணுவ நடவடிக்கைகள் குறித்து தேர்தல் பிரசார கூட்டங்களில் பேச தடை உள்ளது. ஆனால் இதை பாஜகவினர் கவனத்தில் கொள்வதில்லை. பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவருமான அமித்ஷாவும் புல்வாமா தாக்குதல் பாலகோட் விமானப்படை தாக்குதல், அபிநந்தன் விடுதலை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் பற்றி பேசி வருகின்றனர்.

இது குறித்து எழுப்பப்படும் புகார்களை தேர்தல் ஆணையக் குழு ஒன்று விசாரித்து வருகிறது. இந்த குழுவில் தலமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, அசோக் லாவசா உள்ளிட்ட தேர்தல் ஆணையர்கள் உள்ளனர். இந்த குழுவில் புகார்கள் குறித்து தங்கள் முடிவுகளை உறுப்பினர்கள் அளித்த பின் தலைமை தேர்தல் ஆணையர் பெரும்பான்மை அடிப்படையில் இறுதி முடிவை அறிவிக்கிறார்.

பாஜக மீதான ராணுவ நடவடிக்கைகள் குறித்த பேச்சுக்களில் 5 புகார்களை குழு ரத்து செய்துள்ளது. இதில் 4 முடிவுகள் பிரதமர் மோடி மீதும் ஒன்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மீதும் ஆகும். இந்த புகார்கள் அனைத்திலும் பாஜகவுக்கு எதிராக தேர்தல அணையர் அசோக் லவசா முடிவு எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் மற்றவர்கள் பாஜகவுக்கு சாதகமாக முடிவு எடுத்துள்ளனர்.

இறுதி முடிவை பெரும்பானமை அடிப்படையில் எடுப்பதால் பாஜகவின் மீதான ஐந்து புகார்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் இறுதியாக தள்ளுபடி செய்யப்பட்ட புகார் அபிநந்தன் விடுதலைக்காக பாகிஸ்தானை இந்திய அரசு மிரட்டியதாக பிரதமர் மோடி தெரிவித்தது ஆகும்.