மின்சார வாகன உற்பத்தி : அசோக் லேலண்ட் – சென்னை ஐஐடி கூட்டு

சென்னை

மின்சார வாகன உற்பத்தி செய்ய அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னை ஐஐடி யின் உதவியை நாடி உள்ளது.

இந்தியா முழுமைக்கும் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் மட்டுமே விற்பனைக்கு விட வேண்டும் என்னும் சட்டம் இயற்ற அரசு உத்தேசித்துள்ளது தெரிந்ததே.   இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் சென்னையிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் இயங்கி வருகின்றன.   நாட்டின் பல பகுதிகளுக்கும் வாகனங்கள் இங்கிருந்துதான் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப் படுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் உற்பத்தி தொழில்நுட்பம் மிகவும் புதியது.   எனவே இதை மேம்படுத்த பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளன.     இந்நிலையில் சென்னையின் புகழ் பெற்ற கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி தற்போது மின்சார வாகன உற்பத்தித் துறையை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் இறங்கி உள்ளது.   இந்த ஆராய்ச்சியில் இந்தியாவின் புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் கூட்டு சேர்ந்துள்ளது.

அசோக் லேலண்டின் வேண்டுகோளுக்கிணங்க,  அந்த நிறுவனத்தின் பண உதவியுடன் இந்த ஆராய்ச்சியை சென்னை ஐ ஐ டி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   இந்த ஆராய்ச்சியின் முடிவில் அசோக் லேலண்ட் மின்சார வாகனங்கள் உற்பத்தியை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.