வெளிநாட்டு திரைப் படங்களில் தற்போது Dramedy எனும் பதம் அதிகம் புழங்கும் ஒரு ஜானராக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அந்த வகை படங்கள் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. அதுவும் தமிழில் இந்த வார்த்தை வரும் முன்பாகவே அந்த வகையில் படங்கள் வந்திருக்கிறது. நாம் மிக அற்புதமான குடும்ப படங்களை ஏராளமாக தந்திருக்கிறோம். உறவுகளின் சிக்கல்களை, மேன்மையை, உணர்வுபூர்வமாக, நகைச்சுவை கலந்து சொன்ன கதைகள் இங்கு ஏராளம். அந்த வகையில் கெனன்யா ஃப்லிம்ஸ் தயாரிப்பாளர் ஜெ. செல்வகுமார் நகைச்சுவை பொங்கும் உணர்வுபூர்வ மான குடும்ப காமெடி டிராமாவை தனது அடுத்த தயாரிப்பாக தயாரிக்கவுள்ளார். தற்போதைக்கு தலைப்பிடப்படாத “தயாரிப்பு எண் 7 “( Production no 7) ஆகிய இந்த படத்தில் அசோக்செல்வன், நிஹாரிகா நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள்.
சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்வாதினி தனது அறிமுக இயக்கமாக இப்படத்தை இயக்குகிறார். இன்று இப்படத்தின் துவக்கம் இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் பாடல் வேலைகளை துவக்கியதன் மூலம் இனிதே ஆரம்பித்தது.


படம் குறித்து கெனன்யா ஃப்லிம்ஸ் தயாரிப்பாளர் ஜெ.செல்வகுமார் கூறியதாவது: “ஓ மை கடவுளே” மூலம் வெற்றியின் உச்சத்தை தொட்டிருக்கும் அசோக்செல்வனுடன் மீண்டும் இணைவது எங்கள் நிறுவனத்திற்கு பெரும் பலம். அற்புதமான திறமை கொண்ட, உணர்வுகளை எளிதில் திரையில் காட்டும் நடிகை நிஹாரிகா படத்தில் இணைந்திருப்பது மேலும் மகிழ்ச்சி. இன்று இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மேற்பார்வையில் பாடல் வேலைகளை துவக்கி, படத்தை ஆரம்பித்துள்ளோம். தற்போதைய சூழல் முழுக்க சமநிலையை அடைந்த பின் படப்பிடிப்பை துவக்கவுள்ளோம். . இப்படத்தில் இசையமைப்பாளராக லியான் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளராக ஏஆர்.சூர்யா, படத்தொகுப்பாளராக ரிச்சர்ட் கெவின் பணிபுரிகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.