ராஜஸ்தான் முதல்வர், துணைமுதல்வர் பதவி ஏற்றனர்: ராகுல், ஸ்டாலின் நேரில் வாழ்த்து

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, மாநில முதல்வராக மூத்த காங்கிரஸ்  தலைவர் அசோக் கெலாட்டும்,  மாநில துணைமுதல்வராக சச்சின் பைலட்டும் இன்று பதவி ஏற்றனர். மாநில கவர்னர் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி ஏற்ற முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சித்தலை வர்கள், மாநில முதல்வர்கள் உள்பட ஏராளமானோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

அசோக் கெலாட், சச்சின் பைலட் பதவி ஏற்றபோது நடுவில் கவர்னர் கல்யாண்சிங்

நடைபெற்று  முடிந்த ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர் யார் என்பதை கடந்த 14ந் தேதி ராகுல்காந்தி அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து ஜெயப்பூரில்  உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பர்ட் மண்டபத்தில்  பதவி ஏற்பு விழா நடைபெற்றது.  மாநில கவர்னர் கல்யாண்சிங், முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த எழில்மிகு நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, சரத்பவார், திமுக தலைவர்  ஸ்டாலின் உள்பட கூட்டணிக்கட்சி தலைவர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முன்னாள் ராஜஸ்தான் பாஜ முதல்வர் வசுந்தராஜே சிந்தியாவும் விழாவில் கலந்து கொண்டு பதவி ஏற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.