டில்லி

துணை ராணுவப்படை வீரர்களுக்குக் காதி சீருடை அளிக்க உத்தரவிட்ட அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆர் எஸ் எஸ் இயக்கத்தலைவரக்ளில் ஒருவரான அஸ்வினி மகாஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்ட சமயத்தில் அன்னிய துணிகளை அணிய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.   அதையொட்டி நாடெங்கும் காதி என அழைக்கப்படும் கதர் கைத்தறித் துணிகள் பிரபலம் அடைந்தன.    ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகு கதராடைகள் அணிவது பெருமளவில் குறைந்தது.  தற்போது பாலியஸ்டர் துணிகள் பிரபலமாக உள்ளன.

மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் பாலியஸ்டர் துணி சீருடைகள் வழங்கப்படு வருகின்றன.  கடந்த அக்டோப்ர் மாதம் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150 ஆம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.   அதையொட்டி மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மத்திய அரசின் கீழ் நடைபெறும் பள்ளிகளுக்குக் காதி சீருடை வழங்க உள்ளதாக அறிவித்தது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இனி துணை ராணுவப் படை (பாரா மிலிடரி ஃபோர்சஸ்) வீரர்களுக்குக் காதி சீருடைகள் வழங்க உள்ளதாக அறிவித்தார்.  இதன் மூலம் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களுக்குச் சீருடை வழங்க உள்ளதால் பல்லாயிரக்கணக்கான நெசவுத் தொழிலாளிகள் பயனடைவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஒரு பிரிவான ஸ்வதேசி ஜாக்ரன் மஞ்ச் தலைவரான அஸ்வினி மகாஜன், “அமித் ஷாவுக்கு பாராட்டுக்கள். சுதேசி இயக்கம் செல்லாக்காசு எனக் கூறியவர்களுக்கு இதோ பதில்.   சரியான வாய்ப்பு கிடைத்தால் காதி மிண்டும் ஒளிரும்.  இந்த துணிகள் நல்லவை மற்றும் உழைப்பவை.  இதன் மூலம் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும்.  தேவை இல்லாமல் மலிவைக் கண்டு மயங்கி நாம் வேலைவாய்ப்பைத் தொலைக்கிறோம்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.