மோடியின் கேள்வியால் புகைப்பட தடையை நீக்கிய தொல்பொருள் துறை

டில்லி

புராதன இடங்களில் புகைப்படம் எடுக்க விதித்திருந்த தடையை மத்திய தொல்பொருள் துறை நீக்கி உள்ளது.

மத்திய தொல்பொருள் துறையினரால் பல சுற்றுலாத்தலங்கள் புராதன இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன.    இந்த இடங்களை காண வரும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கமாக இருந்து வந்தது.    இந்தத் துறையால்  நாட்டில் உள்ள தாஜ்மகால், அஜந்தா குகைகள், லே அரண்மனைஉள்ளிட்ட 3686 இடங்கள் புராதனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணமாக இந்த இடங்களில் புகைப்படங்கள் எடுப்பதை கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய தொல்பொருள் துறை தடை செய்தது.   இதனால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் அதிருப்தி அடைந்தனர்.    இதற்கு நாடெங்கும் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரதமர் மோடி மத்திய தொல்பொருள் துறை அலுவலகத்தின் தரோவர் பவன் என்னும் புதிய கட்ட்டத்தை நேற்று காலையில்  திறந்து வைத்தார்.   அந்த விழாவில் அவர், “புராதன இடங்களில் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.   இதற்கு பாதுகாப்பு ஒரு காரணமாக சொல்லப் படுகிறது.

தற்போது தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துள்ளது.    செயற்கைக் கோள் மூலம் உலகின் அனைத்து இடங்களும் வெகு தூரத்தில் இருந்தே புகைப்படம்  எடுக்க முடியும் நிலை உள்ளது.   எனவே இவ்வாறு புகைப்படம் எடுக்க தடை விதிப்பது சரியானது தானா?.” என வினா எழுப்பினார்.

நேற்று மாலை அவர் கருத்தை ஒட்டி தற்போது அந்த தடையை மத்திய தொல்பொருள் துறை நீக்கி அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.  அந்த அறிவிப்பில், “பிரதமர் மோடியின் விருப்பப் படி அனைத்து புராதன இடங்களிலும் விதிக்கப்பட்டிருந்த புகைப்படம் எடுப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.   தாஜ்மகால், அஜந்தா குகைகள், மற்றும் லே அரண்மனை ஆகிய இடங்களில் மட்டும் உட்புறம் புகைப்படம் எடுக்கக் கூடாது” என அறிவித்துள்ளது.