ஆசியக் கோப்பை: அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஹர்திக் பாண்டியா நீக்கம்

ஆசியக் கோப்பைப் போட்டித்தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணி வீரர்கள் அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது

Hardik

துபாயில் நடந்து வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாக்கிஸ்தான் உட்பட 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த போட்டியின்
போது, இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகுப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்தில் ஹர்திக் பாண்டியா சுருண்டு விழுந்ததால், ஸ்ட்ரெச்சரில் கிடத்தி அழைத்துச் செல்லப்பட்டார்.

ஹர்திக் பாண்டியா கடந்த 12 மாதங்களில் இதுவரை 44 போட்டிகளில் விளையாடியுள்ளார். ரோஹித் சர்மா 46 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்திய அணியில் மற்ற வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட பளுவைக் காட்டிலும் ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுக்கப்பட்ட பளு அதிகமாகும். ஐபிஎல் சீசன் முழுவதிலும் பாண்டியா விளையாடினார். அதன்பின் ஓய்வின்றி இங்கிலாந்து தொடரில் அனைத்து வகையான போட்டிகளிலும் முழுமையாக விளையாடிவிட்டு ஆசியக் கோப்பைக்கும் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, ஆசியக் கோப்பைத் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகுவதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்யும் போது அக்சர் படேலுக்கு கையில் காயம் ஏற்பட்டு இருந்தது. ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது ஷர்துல் தாக்கூருக்கு வலது இடுப்புப் பகுதியில் பிடிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வருகிறார் . இதையடுத்து ஹர்திக் பாண்டியோவோடு சேர்த்து, சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் நீக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.

நீக்கப்பட்ட வீரர்களுக்கு பதிலாக, 3 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக தீபக் சாஹரும், அக்ஸர் படேலுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக சித்தார் கவுலும் அழைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இவர்கள் நாளைக்குள் இந்திய அணியில் இணைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.