ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தான் – இந்தியா மோதிய போட்டி சமனில் முடிந்தது

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் – இந்தியா அணி மோதிய போட்டி சமனில் முடிந்தது. இரு அணிகளும் 252 ரன்களை எடுத்து போட்டியை சமன் செய்தன. கடைசி நிமிடத்தில் இந்திய அணியின் வெற்றியை பறித்து போட்டியை ஆப்கானிஸ்தான் அணி சமன் செய்தது.

india

துபாயில் நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றை கடந்து ‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

நேற்று முன் தினம் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது. இதையடுத்து, இன்றைய போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய ஜாவித் மற்றும் ரஹமத் ஷா நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். 65 ரன்கள் என்ற நிலையில் 12.4 ஓவரில் ஜடேஜாவின் பந்தை எதிர்கொண்ட ஜாவித் ஆட்டமிழந்து வெளியேறினார். இதே போன்று, அணியின் ஸ்கோர் 81 ரன்கள் எட்டிய நிலையில் ரஹ்மத் ஷா 14.4 ஓவரில் ஜடேஜா வீசிய பந்தை அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய முகமது ஷசாத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 116 பந்துகளில் சதத்தை கடந்து 124 ரன்கள் எடுத்திருந்தார்.

afganistan

இப்போட்டியில் சஷாத், ஆப்கானிஸ்தான் அணி மொத்தமாக 131 ரன்கள் எடுத்திருந்த போது தனது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் அணியின் குறைவான ரன்னில் தனது சதத்தை பூர்த்தி செய்த வீரர்கள் பட்டியலில் சஷாத், முன்னாள் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிதி சாதனையை சமன் செய்துள்ளார். கடந்த 2005ல் கான்பூரில் நடந்த இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 131 ரன்கள் எடுத்த போது அப்ரிதி சதத்தை எட்டினார். பின் 2011ல் தாக்காவில் வங்கதேச அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் வாட்சன், அணி 135 ரன்கள் எடுத்த போது சதத்தை பூர்த்தி செய்தது குறிப்பிடத்தக்கது.

37.5 ஓவரின் ஜாதவ் பந்தில் ஷாஹ்சாஜ் ஆட்டமிழக்க அதன் பின்னர் பேட்டிங் செய்த முகமது நபி 56 பந்துகளில் 64 ரன்களை எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்களை ஆப்கானிஸ்தான் அணி எடுத்தது. இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். சாஹர், கலீல் அஹமத் மற்றும் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர்.

இதையடுத்து, 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த ராகுல் மற்றும் ராயுடு அரை சதம் கடந்தனர். 66 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த ராகுல், ரஷீத் கான் பந்தை எதிர்கொண்டபோது ஆட்டமிழந்தார். இதேபோல் 49 பந்துக்களில் 57 ரன்கள் எடுத்த ராயுடு நபி பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய தோனி 8 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் 44 ரன்களில் ஆட்டமிழக்க, மணிஷ் பாண்டே 8 ரன்களிலும், ஜாதவ் 19 ரன்களிலும் வெளியேறினர். இதையடுத்து 40 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் இந்திய அணி எடுத்திருந்த நிலையில் ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இவர்களை தொடர்ந்து, பேடிங் செய்த ஜடேஜா நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். 49.4 ஓவரில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா பவுண்ட்ரி அடிக்க முயற்சித்து விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக இன்றைய போட்டி சமனில் முடிந்தது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் பங்கேற்ற இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியை சமனிலும் முடித்துள்ளது.

இன்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவணுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால், கேப்டன் பொறுப்பு தோனியிடம் ஒப்படைக்கப்பட்டது. கேப்டன் பதவியை ராஜினாமா செய்து 696 நாட்களுக்குப் பின் மீண்டும் தோனி இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்புடன் களத்தில் இறங்கியதுர சிகர்களுக்கு உற்சாகம் தரும் விதத்தில் இருந்தது. மேலும், தோனி கேப்டன் பொறுப்பேற்று விளையாடும் 200-வது போட்டியாகும். இன்றைய போட்டியில் ரோகித் சர்மா, தவண், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக ராகுல், கலில் அகமது, மணிஷ் பாண்டே, சித்தார்த் கவுல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இப்போட்டியில் ரஹ்மத் விக்கெட்டை கைப்பற்றிய போது, இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா, சச்சின் சாதனையை தகர்த்தெறிந்தார். ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில், 23 போட்டிகளில் 17 ரன்கள் எடுத்த சச்சினை 18 விக்கெட்டுகள் வீழ்த்தி ரவிந்திர ஜடேஜா முதலிடம் பிடித்தார். இவர்களை தொடர்ந்து 7 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்த அஸ்வின் மூன்றாவது இடத்தில் உள்ளார்.