Random image

முறிந்த விரலுடன் துணிச்சலாக நின்று ஒரு கையில் பேட்டிங் செய்த வங்கதேச வீரர் – சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுக்கள்

ஆசிய கிரிக்கெட் போட்டியில் உடைந்த விரலுடன் ஒரு கையால் பேட்டிங் செய்த வங்கதேச வீரர் தமிம் இக்பாலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. விளையாட்டின் போது எலும்பு முறிவு ஏற்பட்டும் கூட இறுதி வரை நின்று விளையாடி தனது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் தமிம் இக்பால்.

Tamim

14வது ஆசிய கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபுயில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நேற்று நடைபெற்ற முதல் நாள் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

போட்டியின் போது இலங்கை வீரர் லக்மல் 2வது ஓவரில் வீசிய பந்தில், பேட்டிங் செய்த வங்கதேச வீரர் தமிம் இக்பாலின் இடது மணிக்கட்டில் பலமாக அடிப்பட்டது. இதையடுத்து, மைதானத்தை விட்டு தமிம் ரிட்டையர்டு ஹர்டு முறையில் வெளியேறினார். மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்ததில் அவரது இடது ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. அதற்கு முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டு தமிம் இக்பால் மீண்டும் மைதானத்து திரும்பினார்.

இந்நிலையில் வங்கதேச அணி 229 ரன்களுக்கு 9விக்கெட்டுகளை இழந்த போதும், தமிம் உடைந்த விரலுடன், ஒரு கையால் பேட்டிங் செய்தார். தமிம் ஒரு புறம் கைக்கொடுக்க குஷ்பிகுர் ரஹீம் பவுண்டிரிகளை எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவர்களின் கூட்டணியால் வங்கதேசத்திற்கு 32ரன்கள் கூடுதலாக கிடைத்தன. இதையடுத்து வங்கதேச அணி 137 ரன்கள் வித்யாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

நாட்டிற்காக வலியை பொறுத்துக் கொண்டு ஒரு கையால் மட்டும் பேட் பிடித்து விளையாடிய தமிம் இக்பாலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. எலும்பு முறிவு ஏற்பட்டதால் குறைந்தது ஆறு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், ஆசிய கோப்பை தொடரில் இருந்து தமிம் இக்பால் வெளியேறினார். இவருக்கு பதிலாக நஜ்மூல் சாந்தோ விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.