புவனேஸ்வர்:

ஆசிய தடகள போட்டியில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கம் வென்றார்.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் லட்சுமணன், கோபி, காளிதாஸ் ஹிரேவ் பங்கேற்றனர். இதில் அபாரமாக செயல்பட்ட தமிழக வீரர் லட்சுமண், முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதன்மூலம், இம்முறை 2வது தங்கம் வென்றார். முன்னதாக 5000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். தவிர இது, ஆசிய தடகளத்தில் இவரது 4வது பதக்கம். கடந்த 2015ம் ஆண்டில் சீனாவின் உகான் நகரில் நடந்த ஆசிய தடகளத்தில் ஒரு வெள்ளி (10,000 மீட்டர்), ஒரு வெண்கலம் (5,000 மீட்டர்) கைப்பற்றினார்.

இப்போட்டியில் அசத்திய மற்றொரு இந்திய வீரர் கோபி 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இவர், கடந்தாண்டு அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த தெற்காசிய விளையாட்டு 10,000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார்.