ஆசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா : மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தேசியக் கொடியை ஏந்தி செல்கிறார்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் இந்தியா சார்பில் பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ளார். ஆகஸ்ட் 18ம் தேதில் இருந்து நடந்து வந்த இந்த விளையாட்டு போட்டிகளில் இந்தியா 69 பதக்கங்களை பெற்றுள்ளது.

rani-rampal

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவில் உள்ள ஜகர்த்தா நகரில் ஆகஸ்ட் 18ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் இந்தியா, பாக்கிஸ்தா, கொரியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இந்தியா சார்பில் 571 வீரர், வீராங்கனைகள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.

ஆசிய விளையாட்டின் இறுதி நாளான நேற்று இந்தியா குத்துச்சண்டையிலும், சீட்டு விளையாட்டிலும் தங்கப்பதக்கம் வென்றது. இதையடுத்து போட்டியின் நிறைவு நாளான இன்று அனைத்து நாட்டு வீரர்களும் அணிவகுத்து செல்லும் நிகழ்வு நடைபெற உள்ளது. ஆசிய விளையாட்டின் நிறைவு விழாவில் இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் இந்திய தேசியக் கொடியை ஏந்தி செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் நரிந்தர் பத்ரா தெரிவித்துள்ளார்.

இப்போட்டியின் தொடக்க விழாவில் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா இந்திய கொடியை ஏந்திச் சென்றார். இவர் ஈட்டி எறிதலில் சிறப்பாக விளையாடி, இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் பெற்று தந்தார். அதே போல் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி, வெள்ளிப் பதக்கம் வென்றது. இவர்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் ஹாக்கி தொடரின் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

இறுதி சுற்றில் ஜப்பானை எதிர்கொண்ட இந்திய ஹாக்கி மகளிர் அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிவென்றது. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலப்பதக்கங்களை வென்று அசத்தி உள்ளது.