ஆசிய விளையாட்டின் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டிகளின் ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. ஜப்பானை எதிர்கொண்ட இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

indian

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலம்பெங் நகரத்தில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இப்போட்டிகள் செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா உட்பட 45 நாடுகளை சேர்ந்த 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கினர்.

இந்நிலையில் பெண்களுக்கான ஹாக்கி போட்டியின் இறுதி சுற்றில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தனர். ஆனால் முதல் பாதியின் 11வது நிமிடத்தில் ஜப்பானின் ஒகிவா முதல் கோல் அடித்தார். இதையடுத்து 25வது நிமிடத்தில் இந்தியாவின் நேகா கோயல் கோல் அடித்து ஜப்பானிற்கு பதிலடி கொடுத்தார். இதனால், முதல் பாதி போட்டி 1-1 என சமநிலை வகித்தது.

அதன்பிறகு அதிக எதிர்ப்பார்ப்புடன் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. போட்டி தொடங்கி 44வது நிமிடத்தில் ஜப்பானின் மோடோமி இரண்டாவது கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோல் அடிக்க இந்திய வீராங்கனைகள் கடுமையாக முயன்றும் முடியவில்லை.

போட்டியின் முடிவில், இந்திய பெண்கள் அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோவியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. 1982ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டில் இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றது. கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் வெல்லும் என்று பெரிதும் எதிர்ப்பார்த்த நிலையில், இந்தியாவிற்கு ஆறுதலாக வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.