Random image

” ஆசிய விளையாட்டு போட்டி வெறும் டிரெய்லர் தான், அடுத்த ஒலிம்பிக் போட்டியில் முழு படத்தையும் பார்க்க உள்ளீர்கள் “ – இந்திய ராணுவத் தளபதி

பாக்கிஸ்தானை பொறுத்தவரை நாங்களும் நீரஜ் சோப்ரா போன்று மாறத் தயார் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பார்த்தது டிரெய்லர் என்றும், ஒலிம்பிக் போட்டியில் முழு படத்தையும் பார்க்க உள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.

bipin

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஈட்டு எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இவர், 3 வது இடம் பிடித்து வெண்கலம் வென்ற பாக்கிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இரு நாட்டு வீரர்களும் கைகுலுக்கிய புகைப்படம் சமூக வளைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. நீரஜ் சோப்ராவின் இந்த செயலை பாராட்டி பலரும் கருத்து தெரிவித்தனர். விளையாட்டில் பகைமை இல்லை என்பதை நீரஜ் உணர்த்திவிட்டதாக பலர் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ராணுவத் தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். அப்போது பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ராவத் பாராட்டு தெரிவித்து பேசினார். நிகழ்ச்சியில் ராவத் பேசியதாவது, “ ஆசிய போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். போட்டியில் வெற்றிபெற்றவர்கள் மட்டுமின்றி பங்கேற்ற அனைவரும் கடின உழைப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் இன்னும் கடினமாக உழைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் பார்த்தது வெறும் டிரெய்லர் மட்டும் தான், அடுத்து நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் முழு படத்தையும் காண உள்ளோம். 2017-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் இருந்த சூழல் இப்போது இல்லை, தற்போது அமைதி திரும்பி முன்னேறி வருகிறது. வரும் காலங்களில் அங்குள்ள மக்கள் வாழும் சூழல் நல்லவிதமாக மாறும்.

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் எந்தவிதமான நட்புரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமானால், முதலில் பாகிஸ்தான் ஒரு அடி முன்னெடுத்து வைக்க வேண்டும். இந்தியா பலமுறை நல்லெண்ண நடவடிக்கைகளை எடுத்து வந்தது. பாகிஸ்தான் முதல் அடி எடுத்து வைத்தால், தீவிரவாதத்தை நிறுத்தினால், இந்திய ராணுவமும் நீரஜ் சோப்ரா போன்று நட்புடன் பழகத் தயாராக உள்ளது “ என்றார்.

மேலும், “ காஷ்மீரில் தீவிரவாதம் அதிகரித்துவிட்டது, உள்ளூர் இளைஞர்கள் அதிகமான அளவில் தீவிரவாத அமைப்பில் சேர்கிறார்கள், மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள், பாதுகாப்பு படையினரால் ஏராளமானோர் கொல்லப்படுகிறார்கள் என்று பல்வேறு விதமான கருத்துக்களை ஊடகங்கள் பரப்பி விடுகின்றன. தீவிரவாத்தை ஒழிக்கவும், மக்களுக்கு அமைதியான வாழ்க்கை கிடைக்கவே ராணுவம் பல்வேறு நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. தீவிரவாதப் பிரச்சினையை காஷ்மீரில் தீர்ப்போம் என நான் நம்புகிறேன். தீவிரவாத பாதைக்கு செல்லும் இளைஞர்கள் மனமாற்றம் அடைந்து மீண்டும் குடும்பத்திற்கு திரும்புவார்கள் “ என்று ராவத் கூறினார்.