பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி: முதல் நாளில் 5 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இந்தியா 2 வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் உட்பட 5 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

para

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷியாவில் தொடங்கியது. அக்டோபர் 16ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் முதல் நாளில் இந்தியா 5 பதக்கங்கள் வென்றுள்ளது.

முதலில் ஆண்கள் அணிக்கான பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதியில் மலேசிய அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இதில் 1-2 என நூலிழையில் தோல்வி அடைந்ததால் இந்தியா வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.

பளு தூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பர்மான் பாஷா வெள்ளிப்பதக்கம் வென்றார். 127 கிலோ எடையைத் தூக்கி பரம்ஜீத் குமார் வெண்கலத்தைத் தட்டிச்சென்றார்.

100 மீட்டர் பட்டர்ஃப்ளை நீச்சல் போட்டியின் S-10 பிரிவில் போட்டியிட்ட தேவான்ஷி சத்திஜவான் வெள்ளி வென்றார். இதேபோன்று சுயாஷ் ஜாதவ் 200 மீட்டர் தனிநபர் மெட்லே நீச்சல் SM-7 பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார்.

இந்நிலையில் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம் உட்பட 5 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது.