ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் காலமானார்!

ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கனகா, சென்னையில் காலமானார். 86 வயதான காகனா உலக அளவில் மூன்றாவதாகவும், ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராகவும் திகழ்ந்தார்.

kanaka

உலக அளவில் மூன்றாவது பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணருமாக இருந்து வந்தவர் கனகா. சென்னையைச் சேர்ந்த இவர், இந்தியா-சீனா போர்க்காலங்களில் இரண்டு ஆண்டுகளாக ராணுவ மருத்துவராகவும் பணியாற்றினார்.

பின்னர், 1990 காலக்கட்டங்களில் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் நரம்பியல் துறை பேராசிரியராக பணிபுரிந்தார். இவர் தனது மாணவர்களை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணராக மாற்றினார். அவருடைய உறவினர் ஜி.விஜயா தற்போது வேலூரில் உள்ள ஸ்ரீ நாரயணி மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நரம்பியல் துறைத்தலைவராக உள்ளார்.

கனகா தன்னுடைய பணிக்காலத்தில் குறைந்தது 80 பெண்களையாவது நாட்டின் நரம்பியில் அறுவை சிகிச்சை நிபுணராக்கினார். வயது மூப்பு காரணமாக மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் இருந்து கனகா ஓய்வுப் பெற்றப்பின், ஏழை மக்களுக்காக அயராது பாடுபட்டார். இறுதி காலத்தில் தன்னுடைய ஓய்வூதியத்தை வைத்து சென்னை குரோம்பேட்டையில் சந்தன கிருஷ்ணா பத்மாவதி மருத்துவ சேவை மையம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.

பெண்கள் முன்னேற்றத்துக்கு முன்னுதாரணமாக திகழந்த கனகாவுக்கு வயது முதிர்வின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக இன்று தன்னுடைய 86வது வயதில் கனகா காலமானார்.