ஊரடங்கு உத்தரவு மீறலை கண்டித்த போலீஸ் அதிகாரியின் கை துண்டிப்பு

சண்டிகர் :
ஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் நேற்று காலை காய்கனிச் சந்தையில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த போலீஸ் அதிகாரி ஒருவரின் கையை வன்முறைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் துண்டித்தது பரபரப்பாகியுள்ளது. கை துண்டிக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் ஹர்ஜீத் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தினர்.

இது குறித்து பஞ்சாப் போலீஸ் உயரதிகாரி தின்கர் குப்தா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நிஹாங்கியர்கள் என்ற ஒரு மதப்பிரிவைச் சேர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு வாகனம் ஒன்று காய்கனிச் சந்தையின் முனையில் வைக்கப்பட்டுள்ள காவல்தடுப்புகளை உடைத்துக் கொண்டு சீறிபாய்ந்தது. இது நடக்கும் போது காலை 6 மணி. போலீசார்  அவர்களை நிறுத்தி ஊரடங்கு பாஸ்களை காட்டுமாறு கேட்டுள்ளனர், ஆனால் அவர்கள் இறங்கி வந்து போலீசாரை கடுமையாகத் தாக்கினர். தாக்கியவர்கள் நிஹாங் குருத்வாரா சாஹேப்பில் போய் தஞ்சமடைந்தனர்.

அங்கு போலீசார் சிறப்புப் படையுடன் சென்று அவர்களைச் சரணடையுமாறு உத்தரவிட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின் உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் குருத்வாராவிற்குள் நுழைய அரைமணி நேரத்தில் போலிசாரைத் தாக்கியவர்கள் சரணடைந்தனர் என்று தெரிவித்தார்.  போலீஸ் அதிகாரி கையை கத்தியால் வெட்டிய நபர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட 3 பேர் விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.