மதுரை:
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்த விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் எச்சரிக்கையின் பேரில்   ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் உள்ளிட்டோர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உள்ளனர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை , கோவில்பட்டி மாவட்ட  நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேரில் சென்று விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, அவர்கள்  நேற்று கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை நடத்தினர். விசாரணை யின் போது மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக மாவட்ட நீதிபதிபகள் உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதன் கடும் கோபம் அடைந்த உயர்நீதி மன்ற நீதிபதிகள், தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன், காவலர் மகாராஜன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது. மேலும்  இன்று (30ந்தேதி)  நேரில் விசாரணைக்கு  ஆஜராகவும்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன்,காவலர் மகாராஜன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகியுள்ளனர். இந்த நிலையில் வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது.