ஜெயலலிதா வாழ்வோடு என் வாழ்வின் அம்சங்களும் ஒத்துப்போகின்றன: கங்கனா ரனாத்

மும்பை: தன் வாழ்க்கையும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையும் பல ஒத்த அம்சங்களைக் கொண்டுள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாத் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படவுள்ள ‘ஜெயா’ எனும் இருமொழி படத்தில் நடிக்கவுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு தமிழில் ‘தலைவி’ என்றும், இந்தியில் ‘ஜெயா’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இவர், ‘மதரஸாப்பட்டிணம்’ மற்றும் ‘தெய்வத்திருமகள்’ போன்ற படங்களால் அறியப்பட்டவர்.

“ஜெயலலிதாவின் வாழ்க்கையும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பல அம்சங்களில் ஒத்துப்போவதால், அந்தப் படத்தில் நடிக்க நான் சம்மதித்துள்ளேன். ஆனால், எனது வெற்றிகளைவிட அவரின் வெற்றி மிகப்பெரியது.

எனவே, என்னுடைய அல்லது அவருடைய ஆகிய இருவரின் சொந்தக் கதைகளின் அடிப்படையிலான படங்களில் நடிக்க வாய்ப்பிருந்தபோது, நான் அவருடைய கதையையே தேர்ந்தெடுத்தேன்”. என்றார்.

– மதுரை மாயாண்டி