Random image

ஐபிஎஸ் மகளுக்கு ‘சல்யூட்’ அடித்த துணைகமிஷனர் தந்தை: தெலுங்கானாவில் நெகிழ்ச்சி சம்பவம்

 

ஐதராபாத்:

பிஎஸ் படித்து காவல்துறையில் உயர்பொறுப்பு வகித்து வரும்  மகளுக்கு, துணை கமிஷனரான தந்தை ‘சல்யூட்’ அடித்த விவகாரம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம்: தெலுங்கானாவில் நடைபெற்று உள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் மல்காஜ்கிரி என்ற பகுதியில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருபவர் உமா மகேஸ்வரா சர்மா. இவர் சப் – இன்ஸ்பெக்டராக போலீஸ் பணியில் சேர்ந்து  30 ஆண்டுகளாக பணி செய்து வருகிறார். அடுத்த ஆண்டு அவர் ஓய்வுபெறும் நிலையில்  தற்போது  துணை கமிஷனராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் சிந்து சர்மா. 2014ம் ஆண்டு ஐ.பி.எஸ் பணியில் சேர்ந்தார். தற்போது தெலுங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்ட எஸ்.பி.,யாக பணியாற்றி வருகிறார். ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் நேற்று ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் பொது கூட்டம் நடந்தது. இதில் பாதுகாப்பு பணியில் தந்தையும், மகளும் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சொந்த மகள் என்றாலும், உயர் அதிகாரி என்பதால், சல்யூட் அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது உமா மகேஸ்வரா சர்மாவுக்கு. அவரும் கம்பீரமாக சல்யூட் அடித்தார். இதை பார்த்த பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உமா மகேஸ்வரா சர்மா, ‘பணியில் இருக்கு போது நாங்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்தது இதுவே முதல் முறை. மகளுடன் சேர்ந்து  பணியாற்ற மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன். அவர் எனக்கு உயர் அதிகாரி. எனவே, நேரில் பார்த்த போது சல்யூட் அடித்தேன். இதில் எனக்கு மகிழ்ச்சியே… நாங்கள் வீட்டில் தந்தை, மகள் போலவே இருப்போம்’ என்று கூறனார்.

சிந்து சர்மா கூறுகையில்,’ பொது கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு பணிக்காக வந்தேன். தந்தையுடன் பணியாற்றியதால் மிகவும் சந்தோஷப்பட்டேன். இது மிகவும் நல்ல தருணம்’ என்றார்.