அஸ்ஸாம்: ரெயில் மோதி 6 யானைகள் பரிதாப பலி

சோனித்புர்:

அஸ்ஸாம் மாநிலம் சோனித்புர் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் மீது கவுகாத்தி-நகர்லகுன் எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு 1 மணியளவில் பயங்கரமாக மோதியது.

இதில் 6 யானைகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தன. தகவலறிந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். யானைகளின் உடல்கள் அங்கேயே பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த துயர சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு விரைந்து சென்று சோகத்துடன் யானைகளின் உடல்களை பார்த்து செல்கின்றனர். கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இயற்கைக்கு மாறான முறையில் 140க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளதாக வன விலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.