சில்சார், அசாம்

அகில பாரத வித்யார்த்தி பரிஷத் என்னும் அமைப்பின் புகாரினால் பணி இழந்த அசாம் பல்கலைக் கழக பேராசிரியரை உயர்நீதிமன்றம் தலையிட்டு மீண்டும் பணியில் அமர்த்தி உள்ளது.

அகில பாரத வித்யார்த்தி பரிஷத் என்னும் மாணவர் அமைப்பு ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் ஒரு பிரிவு ஆகும்.    இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஸ்ரீஹரி போரிகர் என்பவர்  அசாம் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் சர்வாக் மீது புகார் அளித்துள்ளார்.    அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் நகரத்தில் அமைந்துள்ள இந்த அசாம் பல்கலக்கழகம் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த புகார் அப்போதைய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிரிதி இரானியிடம் அனுப்பப் பட்டுள்ளது.    அவர் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.    ஏற்கனவே ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் மாணவர் அமைப்பின் எந்தப் புகாரையும் அமைச்சர்  கவனிப்பதில்லை  என பலமுறை பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதன் பிறகு ஸ்மிரிதி அந்தத் துறையில் இருந்து மாற்றப்பட்டு பிரகாஷ் ஜாவேத்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.   பிரகாஷ் பதவி ஏற்ற பின் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருந்து அசாம் பல்கலைக்கழக பதிவாளருக்கு ஒரு நோட்டிஸ் வந்துள்ளது.

அதில், “சர்வாக் என்னும் பேராசிரியர் பல்கலைக் கழக மானியக் குழு அறிவித்துள்ள குறைந்த பட்ச கல்வித் தகுதி இல்லாமலே பணியில் அமர்த்தப் பட்டுள்ளதாக அகில பாரத வித்யார்த்தி பரிஷத் பொதுச் செயலாளர் ஸ்ரீஹரி போரிகர் புகார் அளித்துள்ளார்.   அது மட்டும் இன்றி மேலும் இரு ஆசிரியர்களும் அதே போல பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர்.  அவர்கள் மீது விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப் பட்டிருந்தது.

அதன் பிறகு திடீரென சர்வாக் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   அவர் மீது விசாரணை எதுவும் நடத்தப் பட்டதாக தெரியவில்லை.    அந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட படி மற்ற இரு பேராசிரியர்கள் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.     இது மற்ற பேராசிரியர்கள் இடையே கடும் சர்ச்சையை உண்டாக்கியது.   இந்த விவகாரம் அசாம் உயர்நீதி மன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.   அதன் பின் உயர்நீதிமன்ற உத்தரவுக்கிணங்க சர்வாக் மீண்டும் டிசம்பர் 18 முதல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

ஆனால் பேராசிரியர்கள் இடையில் ஏற்பட்டுள்ள அதிருப்தி மேலும் வளர்ந்து வருகிறது.    இது குறித்து பேராசிரியர்கள் கூட்டமைப்பின் வழக்கறிஞர் சப்யாசாசி சட்டர்ஜி, “பல்கலைக் கழகம் முதலில் பணி நீக்கம் செய்ததற்கும், பின்பு அந்த நீக்க உத்தரவை ரத்து செயததற்கும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.   இது பேராசிரியர்களிடையே சந்தேகத்தை உண்டாக்கி உள்ளது.   சர்வாக் ஒரு படித்த அறிஞரும்  முன்னணி பத்திரிகையாளரும் ஆவார்.   அவருடைய கடவுள் மறுப்புக் கொள்கையால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பலரும் கருதுகின்றனர்.   இது போன்ற தவறான நடவடிக்கைகள் வேறு யார் மீதும் எடுக்கப் படாமல் இருக்க பல்கலைக் கழக நிர்வாகம் சரியான வழிகாட்ட்டுதலை அறிவிக்க வேண்டும்”  எனத் தெரிவித்துள்ளார்.