அசாம்:

சோனித்பூர் மோதலை பற்றி விசாரிக்கும்படி அசாம் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 

அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் பூமி பூஜையை தொடர்ந்து வடக்கு அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சோனித்பூர் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் மாநில காவல்துறை அதிகாரியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டியுள்ள சோனித்பூர் மாவட்டத்தில் பஜ்ரங் தளத்தின ஆதரவாளர்களுக்கும், மற்றொரு குழுவிற்கும் புதன்கிழமை மோதல் ஏற்பட்டது.

அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பூமி பூஜை விழாவைக் கொண்டாடுவதற்காக புதன்கிழமை பஜ்ரங் தள ஆதரவாளர்கள் கோவிலிலிருந்து ஒரு பேரணியை நடத்தினர். பஜ்ரங் தள ஆதரவாளர்கள் ஒரு மசூதியின் அருகே சிலர் பட்டாசு வெடித்ததையடுத்து, தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த மோதல் கடுமையாக மாறி 10 பேர் காயமடைந்துள்ளனர். நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் மாநில போலீஸ் அதிகாரி பாஸ்கர் ஜோதி மஹன்டாவிடம் தீவிரமாக விசாரணை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் தற்போது இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதல் பற்றி விசாரித்து வருகின்றனர்.