“கொரோனா தடுப்பு மருந்தை விரைவில் கிடைக்கச் செய்யுங்கள்” – மத்திய அரசை வலியுறுத்தும் அஸ்ஸாம் அரசு

குவஹாத்தி: சுகாதாரப் பணிகளில் முன்வரிசையில் களத்தில் இருக்கும் மருத்துவ ஊழியர்களுக்காக, குறைந்தபட்சம் 2ம் நிலை மானுடப் பரிசோதனையில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தையாவது கிடைக்கச் செய்ய வண்டுமென மத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் அஸ்ஸாம் மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.

“கொரோனா தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றுமாறு நாம் மக்களை அறிவுறுத்தி வருகிறோம். ஆனால், தற்போதைய சூழலோ மிகவும் கவலைத் தரக்கூடியதாக உள்ளது.

எனவே, 2ம் நிலை மானுடப் பரிசோதனையில்(மூன்றாம் நிலை மானுடப் பரிசோதனைக்கு இன்னும் உட்படாத) தேறிய தடுப்பு மருந்தையாவது அனுப்பி வைக்கும்படி கேட்கிறேன்.

மூன்றாம் நிலை மானுடப் பரிசோதனைக்கா நாம் காத்திருந்தால், அதற்கான காலக்கட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். எனவே, 2ம் நிலை மானுடப் பரிசோதனையிலேயே மருந்தின் தகுதி நிரூபிக்கப்பட்டால், தற்போது கொரோனா தடுப்புப் பணியில் முன்களத்தில் நின்று பணியாற்றிவரும் மருத்துவ ஊழியர்களின் பயன்பாட்டிற்காகவாவது மத்திய அரசு அதை பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மாநில அமைச்சர ஹிமந்தா பிஸ்வா சர்மா.

தடுப்பு மருந்தை மிகப் பரவலான அளவில், பயன்பாட்டிற்காக விரைவில் கிடைக்கச் செய்வதன் மூலமே, கொரோனா தொடர்பாக நாம் எதிர்பார்க்கும் முடிவைப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.