மாட்டிறைச்சி விற்பனை செய்ததாக 68வயது இஸ்லாமிய முதியவரை தாக்கிய கும்பல்! அசாமில் பரபரப்பு

கவுகாத்தி:

சாமில் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்த ஓட்டலின் முதலாளியான 68 வயது இஸ்லாமிய முதியரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. அவரை பன்றி கறி சாப்பிடக்கூறி வற்புறுத்தி உள்ளது.  இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

அசாம் மாநிலம், பிஷ்வாந்த் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை  சேர்ந்தவர் சவுகத் அலி (வயது68). இவர் அங்குள்ள மதுப்பூர் வாரச் சந்தைப்பகுதியில் பல ஆண்டுகளாக  மாட்டு இறைச்சி விற்பனை செய்து வரும் ஓட்டல் நடத்தி வருகிறார். இதுவரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அவரது வியாபாரம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இந்த வாரச்சந்தைக்குள் புகுந்த ஒரு கும்பல்  சவுகத் அலியை கடையில் இருந்து  வெளியே  இழுத்துவந்து அடித்து உடைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த தாக்குதல் கறித்து,  சவுகத் அலியின் சகோதரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து, தாக்குதல் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய சவுகத்அலியின் சகோதரர், சுமார் 40 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வருகிறோம் என்றவர்,  மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்யக்கூடாது என நோட்டீஸ் கொடுத்திருந்தால், நாங்கள் அதை தவிர்த்திருப்போம், ஆனால், அவர்கள் எனது சகோதரரை தாக்கியது மட்டுமின்றி,  பன்றி இறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்தியுள்ளனர் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கான உள்ளான சவுகத்அலி அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.