இந்தியர் என்ற அடையாளத்தை மீட்டெடுக்க தினமும் போராடும் அசாம் இஸ்லாமியர்கள்

கவுகாத்தி:

இந்தியர்கள் என்ற அடையாளத்தை மீட்டெடுக்க அசாம் இஸ்லாமியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அசாமில் நடக்கும் நலத் திட்டங்கள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் எதுவானாலும், தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்து தாங்கள் இந்தியர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள் அசாம் இஸ்லாமிய பெண்கள்.

கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள ஷமீரா பேகம் என்பவர் இது பற்றி கூறும்போது, எனக்கு கிராமத்தில் நிலமும் வீடும் இருந்தது. 2014-ம் ஆண்டு போடோ மற்றும் பங்களாதேஷ் இஸ்லாமியர்களுக்கிடையே நடந்த கலவரத்தில் எனது வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பங்களாதேஷுக்கு சென்றுவிட்டோம். நிலைமை சீரானதும் சொந்த ஊருக்கு வந்தோம். ஆனால், எங்களை அசாமியர்களாக பாவிக்காமல், பங்களாதேஷிலிருந்து வந்த அகதிகளாக பாவித்தனர்.

மறுபடியும் கலவரம் ஏற்படும் என்பதால், வீட்டை சீரமைக்கவில்லை. வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதின் மூலமே நான் இந்திய பிரஜை என்பதை நிரூபிக்க முடியும் என்றார்.

நாடு திரும்பிய அசாம் இஸ்லாமியர்கள் அகதிகளாகவே கருதப்படுவதால், ஆதார் அட்டை போன்ற அடையாள அட்டைகளை கேட்காத பட்சத்திலும், கொடுப்பதில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதில் மூலமே தாங்கள் இந்திய பிரஜை என்ற அடையாளத்த மீட்டெடுக்க முடியும் என்று இவர்கள் நம்புகின்றனர்.