2வது நாளாக எரியும் அசாம் எண்ணெய் வயல்… 2 தீயணைப்பு வீரர்கள் பலி.. 1600 குடும்பங்கள் வெளியேற்றம்

 கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் உள்ள எண்ணை வயலில் ஏற்பட்ட தீ இன்று 2வது நாளாக எரிந்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் பலியான நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 1600 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு உள்ளது.

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் பக்ஜான் பகுதியில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத் திற்கு சொந்தமான எண்ணெய் வயலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த எண்ணை வயலில் கடந்த 14 நாட்களாக எரிவாயு கசிவு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென தீ பிடித்தது.

முன்னதாக, எண்ணை கசிவை தடுக்கும் பணியில்,  சிங்கப்பூரை சேர்ந்த எண்ணெய் வயல் நிபுணர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினர். அப்போது  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் எண்ணெய் வயலில் இருந்த அனைவரும் வெளியேறினர்.

தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால் அப்பகுதியை சுற்றி வசிக்கும் சுமார் 1600 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தீ பரவிய நிலையில், இதுவரை 6 பேர் காயமடைந்திருப்ப தாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு தீயணைப்பு வீரர்கள் பலியாகி உள்ளனர்.

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த  ஓ.ஐ.எல். நிறுவனத்தின் தீயணைப்பு வீரர்கள் மீது  தீப்பிடித்ததால்  இருவரும் அருகில் உள்ள குளத்தில் விழுந்து தப்பிக்க முயன்றபோது, நீரில்  மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது.

இறந்தவர்களின் பெயர் துர்லவ் கோகய், திகேஷ்வர் கோஹைன் என்றும், இவர்கள் ஓ.ஐ.எல். நிறுவனத்தின் தீயணைப்புப் படையைச் சேர்ந்தவர்கள். இதில் துர்லவ் கோகய் அஸாம் கால்பந்து அணியின் கோல்கீப்பர் என்று கூறப்படுகிறது.

மேலும், தீ விபத்தில் ஏராளமான தாவரங்கள் மற்றும் பல்வேறு வீடுகள் கருகின. அருகில் உள்ள கிராமங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை பார்வையிட்டு வருகின்றனர். விரைவில் நிலைமை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எண்ணெய் வயலுக்கு 3 கிலோ மீட்டர் சுற்றளவில், திப்ரு சைகோவா தேசிய உயிரியல் பூங்கா மற்றும் உயிரின பாதுகாப்பு பூங்காக்கள் அமைந்துள்ளன இந்த எண்ணை வயல் தீ விபத்தால், அங்குள்ள வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.