வுகாத்தி

சாம் மாநிலத்தில் ஏற்கனவே குடியுரிமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் மீது மீண்டும் மறு பரிசீலனை நடைபெற உள்ளதால் சர்ச்சை உண்டாகி இருக்கிறது.

இந்தியாவுக்குள் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து பலரும் அங்கு வாழ வழியின்றி வந்துள்ளனர்.   இவர்கள் நீண்ட நெடுங்காலமாக இந்தியாவில் வசித்து வந்த போதிலும் குடியுரிமை அளிக்கப்படாமல் உள்ளனர்.  இதில் முக்கியமாக இவர்களில் பலர் இந்திய ராணுவம் உள்ளிட்ட பல முக்கிய அரசுத்துறைகளில் பணி புரிந்துள்ளனர்.  இவர்களுக்காகத் தேசிய குடியுரிமை பட்டியல் ஒன்றைக் கடந்த வருடம் அரசு வெளியிட்டது.

இவ்வாறு குடியுரிமைப் பட்டியலில் இணைக்கப்படாத பலரை அகதிகள் எனத் தெரிவித்து அரசு அகதிகள் முகாமுக்கு அனுப்பி வருகிறது.  இதையொட்டி வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  குறிப்பாக அசாம் மாநிலத்தில் போராட்டங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன் தினம் 2018 ஆம் வருடம் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றிருந்தோரில் ஆயிரக்கணக்கானோருக்கு மறு பரிசீலனை நடத்த உள்ளதாக நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.    இவ்வாறு ஒவ்வொரு சிறு கிராமங்களிலும் வசிக்கும் பலருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.   அதுவும் அனைவருக்கும் 24- 48 மணி நேரத்துக்குள் அனைத்து ஆவணங்களுடனும் மறுபரீசிலனை முகாமுக்கு வர வேண்டும் என நோட்டிஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மறுபரிசீலனை முகாமுக்குச் செல்ல மக்கள் 350 கிமீ தூரத்துக்கும் மேல் பயணம் செய்ய வேண்டி உள்ளது.    ஏற்கனவே குடியுரிமை பட்டியல் சரிபார்ப்பு விதிகளின் படி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பரிசீலனை குறித்த அனைத்து விசாரணைகளுக்கும் வருவதற்கு 15 நாட்கள் காலக்கெடு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.   ஆனால் இந்த தீர்ப்பை மீறி இவர்களுக்கு 24 முதல் 48 மணி நேரத்துக்குள் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நோட்டிசுகள் அனைத்தும் இரவோடு இரவாக அளிக்கப்பட்டுள்ளன.    இதனால் அசாம் வாசிகள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.   இது குறித்து அசாமில் உள்ள பல வழக்கறிஞர்களும் சமூக  ஆர்வலர்களும் அரசுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த விசாரணைக்கு வருபவர்களுக்கு போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும் என உள்ளதை அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.

தற்போது காஷ்மீரில் கடும் பதட்டம் நிலவி வருகிறது.   பல தலைவர்கள் வீட்டுக் காவலில்  வைக்கப்பட்டுள்ளனர்.   காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு எண் 370 மற்றும் 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.   உலகமே இதை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருக்கும் போது அசாமில் இவ்வாறு நடப்பது  பலர் கவனத்துக்கு வர வாய்ப்பில்லை என அங்குள்ள ஆர்வலர்கள் கூறுகின்றனர்