வுகாத்தி

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக அசாம் மாநில புகழ்பெற்ற ராப் இசைப் பாடகர் ராகுல் ராஜ்கோவா ஒரு புதிய பாடலை வெளியிட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த புகழ் பெற்ற ராப் இசை பாடகர் ராகுல்  ராஜ்கோவா.  இவர் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்றவர். கடந்த 2017 ஆம் வருடம் பல்கலைக்கழகம் எம் ஃபில் மற்றும் பிஎச் டி படிப்பில் 80% இடங்களை குறைத்தது.   அதை கண்டித்து இவர் தனது முதல் ராப் இசை பாடலை வெளியிட்டார்.

அதன் மூலம்  புகழ் அடைந்த ராகுல் தொடர்ந்து சமூக அவலங்களை குறித்த பாடல்களை பாடி புகழ் அடைந்துள்ளார்.   சுமார் 24 வயதாகும் இந்த இளைஞரின் பாடல்களுக்கு ஏராளமான இளைய தலைமுறையினர் ரசிகர்களாக உள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு உண்டாகி இருக்கிறது.   அது ராகுல் ராஜ்கோவாவையும் கடுமையாக பாதித்துள்ளது.   எனவே அதை ஆதாரமாகக் கொண்டு அவர் ”குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிரான ஒரு ராப்” என்னும் பெயரில் ஒரு பாடலை எழுதி  யு டியூபில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர், “தற்போதைய அசாமின் நிலை என்னை அமர விடாமல் செய்துள்ளது.   ஆகவே நான் இந்த பாடலை உடனடியாக மொபைல் மூலம் பதிவு செய்து யு டியூபில் பதிவேற்றி உள்ளேன்.   நான்  சிறிது நேரமும் பணமும் செலவழித்திருந்தால் இன்னும் நல்ல ஒரு வீடியோவாக இதை பதிவேற்றி இருக்க முடியும்.  ஆனால் என் எண்ணத்தை உடனடியாக வெளிப்படுத்த இவ்வாறு செய்துள்ளேன்.  ஒரு கலைஞனான நாங்கள் அரசை கேள்வி கேட்காமல் வேறு யார் கேட்பார்கள்?” என கூறி  உள்ளார்.

இளைஞர்கள் பலரால் பகிரப்பட்டு வைரலாகும் அந்த வீடியோ இதோ :

 

[youtube https://www.youtube.com/watch?v=2PS95QWuHy4]