அசாம் மாநிலத்தில் சோகம்: ஒரு வாரத்தில் 16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!  

ஜோர்கட்:

சாம் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16 பச்சிளங்குழந்தைகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதுது.

அசாம் மாநிலத்தில் ஜோர்கட் என்ற பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண்களுக்கு பிறந்த குழந்தைகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16 குழந்தைகள் தொடர்ந்து உயிரிழந்துள்ளது. இது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

16 குழந்தைகள் பலியான மருத்துவமனை

இதுகுறித்து விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகமும் 6 பேர் கொண்ட குழுவை நியமித்து விசாரித்து வருகிறது.

இந்த இறப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர், சில பெண்கள் ஆபத்தான நிலையிலேயே பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டதாகவும், சில குழந்தைகள் மோசமான சுகாதார நிலையில் பிறந்த பிறகு மருத்துவமனை எடுத்து வரப்பட்டனர் என்றும் கூறி உள்ளார்.

மேலும் ஒரு சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே நோய்கள் இருந்ததாகவும், கடந்த வாரம் மட்டும் 40க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு குழந்தையையும்  காப்பாற்றுவதற்கு சிறந்த முயற்சி எடுத்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், மருத்துவர்களின் அஜாக்கிரதை காரணமாகவே குழந்தைகள் இறந்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஏற்கனவே உ.பி. மாநிலம் கோரக்பூரில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, அசாம் மாநிலத்தில் ஒரு வாரத்திலேயே 16 குழந்தைகள் இறந்திருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.