அசாம் எஸ் ஐ தேர்வு கேள்வித்தாள் லீக் : ஆளும் பாஜகவுக்குப் பின்னடைவு

வுகாத்தி

சாம் மாநில காவல் உதவி ஆய்வாளர் தேர்வு கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் ஆளும் பாஜக தலைவருக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் பாஜகவின் ஒரே கோஷம் ஊழலுக்கு எதிர் என்பதாகும். இந்த கோஷத்தின் மூலம் இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்து நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியை பிடித்தது.   அசாம் அரசு அதிகாரிகள் பலர் ஊழல் குற்றம் காரணமாகக் கைது செய்யப்பட்டது அரசுக்கு நல்ல புகழை அளித்தது.  ஆனால் தற்போது தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாஜகவுக்குக் கெட்ட பெயர் கிளம்பி உள்ளது.

கடந்த 20 ஆம் தேதி அன்று அசாம் மாநிலத்தில் 597 காவல் உதவி ஆய்வாளர்கள் நியமனத்துக்காகத் தேர்வு நடந்தது.  இந்த தேர்வில் கேள்வித்தாள்கள் வெளியானதாக புகார் எழுந்துள்ளது.   இதில் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் பாஜக தலைவரான திபன் தேகாவும் ஒருவர் ஆவார்.  இவரை அச்சம் மாநில சிஐடி பிரிவினர் கைது செய்து அதன் பிறகு போதிய சாட்சியம் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட உள்ளார்.

இந்த தேர்வை நடத்திய குமார் என்னும் காவல்துறை அதிகாரி தார்மீக பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்துள்ளார்.  அதே வேளையில் தேகாவை கைது செய்யாதது குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது.   அவர் கைது செய்யப்பட்டால் இந்த குற்றத்தில் தொடர்புடைய மேலும் சில பாஜக தலைவர்கள் பெயர் வெளி வரலாம் என்பதால் கைது செய்யப்படவில்லை எனவும் பலர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் திலிப் சர்மா, “சிஐடி காவல்துறையினர் விசாரணை எங்களுக்குத் திருப்திகரமாக இல்லை.  எனவே கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி இந்த குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும்.  அசாம் முதல்வரின் ஊழலுக்கு எதிரான கோஷம் என்பது வெறும் வாய் வார்த்தையாக மட்டும் உள்ளது.

திபன் தேகாவை சிஐடி பிரிவினரிடம் இருந்து காப்பாற்ற உதவியது யார்? அவரை வெளியே விடாமல் இருந்தால் அவர் மேலும் பல பாஜக தலைவர்கள் பெயரை வெளியிட்டிருப்பார் என சொல்லப்படுகிறதே, அவர்கள் யார் யார்? இந்த ஊழலில் பாஜகவின் தலைவர்கள் உள்ளனர் என்பது நிஜமா?  அரசின் நற்பெயரைத் தேர்தல் நேரத்தில் காக்க இது ஒரு நாடகமா?” எனச் சரமாரியாகக் கேள்விகள் எழுப்பி உள்ளார்.