டிடாபர், அசாம்

சாம் மாநிலத்தில் குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த பள்ளி  ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டதால் பதட்டம் அதிகரித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அசாம் மாணவர் சங்கத்தினர் நடத்தும் இந்த போராட்டத்துக்கு திரைக் கலைஞர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள், பொது மக்கள் எனப் பல தரப்பட்டவர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்

அசாம் மாநிலம் ஜோர்கல் மாவட்டத்தில் உள்ள டிடாபர் என்னும் ஊரில் ஜவகர் நவோதயா வித்யாலாயா என்னும் பள்ளி அமைந்திருந்தது.   இதில் பந்திதா போரா என்னும்  பெண் கணினி ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார்.  இவர் தனது முகநூலில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர் போராட்டத்துக்கு ஆதரவாகக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் பள்ளி நிர்வாகம் பந்திதாவை பணி நீக்கம் செய்துள்ளது.  இந்த தகவல் வெளியானதை ஒட்டி மாநிலம் எங்கும் கடும் பதட்டம் ஏற்பட்டது.   அசாம் மாணவர் சங்கத் தலைமை பந்திதாவை விரைவில் மீண்டும் பணி அமர்த்தாவிடில் போராட்டம் வலுவடையும் என எச்சரித்துள்ளது.

இது குறித்து நேற்று ஜோர்கல் மாவட்ட துணை ஆணையர் ரோஷினி, ”பந்திதா போரா பணியில் இருந்து நீக்கப்பட்டார் என்னும் தகவல் உண்மைதான்.   ஆனால் அவர் தனது பணியைச் சரிவரச் செய்யாததால் நீக்கப்பட்டுள்ளாரே தவிர அவரது சமூக வலைத் தள பதிவுகளுக்காக அல்ல” எனத் தெரிவித்துள்ளார்