Random image

வாட்ஸ் ஆப் வதந்தி….மக்களின் தாக்குதலில் சிக்கிய 3 சாதுக்களை ராணுவம் மீட்டது

கவுகாத்தி:

வாட்ஸ் ஆப் வதந்தியை நம்பி மக்களின் தாக்குதலுக்கு ஆளான 3 சாதுக்களை ராணுவம் மீட்டது.

வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் சமீப காலமாக வதந்திகள் அதிகளவில் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த சமூக வலை நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில் குழந்தை கடத்தல் கும்பல் தொடர்பான தகவல் வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல இடங்களில் சந்தேகப்படும் நபர்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் நடந்துள்ளது.

இந்த வகையில் அஸ்ஸாம் மாநிலம் மகாவுர் நகரில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 3 சாதுக்கள் காரில் சென்றனர். அவர்கள் குழந்தை கடத்தும் கும்பல் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதி மக்கள் காரை தடுத்து நிறுத்தினர். 3 பேரையும் வெளியே இழுத்து சராமரியாக அடித்தனர்.

மக்களின் பிடியில் இருந்து 2 சாதுக்கள் தப்பிச் சென்றனர். தகவலறிந்த ராணுவ அதிகாரிகள் விரைந்து வந்து மக்களிடம் சிக்கியிருந்த ஒரு சாதுவை மீட்டனர். தப்பிய 2 பேரையும் சிலர் பிடித்து ராணுவத்திடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து அவர்களை ராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் 3 பேரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.