15 ஆவணங்கள் இருந்தும்….. அசாம் பெண்மணியை குடியுரிமைக்காக்க போராடவைக்கும் ‘விதி’

கவுகாத்தி : 

 

சாம் மாநிலம் பஃசா மாவட்டம், கோயாபரி கிராமத்தை சேர்ந்தவர் ஜபீதா பேகம், வயது 50, அசாம் மாநிலத்தில் எடுக்கப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேட்டில், தகுந்த சான்றிதழ் இல்லாத காரணத்தால், சந்தேகத்திற்குரிய குடிமக்கள் என்று குறிக்கப்பெற்று அவருக்கு வாக்குரிமை உள்ளிட்ட அனைத்தும் பறிக்கப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான அல்லது சந்தேகத்திற்குரிய வாக்காளர் என்பது அசாமில் உள்ள ஒரு வகை வாக்காளர்களாகும், அவர்கள் முறையான குடியுரிமை நற்சான்றிதழ்கள் இல்லாததால் அரசாங்கத்தால் விலக்கப்படுகிறார்கள். டி வாக்காளர்கள் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் சிறப்பு தீர்ப்பாயங்களால் தீர்மானிக்கப்படுகிறார்கள், மேலும் டி வாக்காளராக அறிவிக்கப்பட்ட நபருக்கு வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை.

நன்றி : எக்ஸ்பிரஸ்

தேசிய குடியுரிமை சட்டத்தின் சரத்துப்படி இவர் 1971 க்கு பிறகு சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து குடியேறியவர் என்று அடையாளப்படுத்தப்பட்டு, கடந்த இரண்டாண்டுகளாக தன்னை ஒரு இந்திய குடிமகள் என்று அயல்நாட்டினர் தீர்ப்பாயத்தில் முறையிட்டார்.

தீர்ப்பாயத்தில், அவர் தனது தந்தை ஜாபேத் அலியின் 1966, 1970, 1971 வாக்காளர் பட்டியல்கள் உட்பட 15 ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார். தீர்ப்பாயம் ஜாபேத் அலி தான் ஜபீதா பேகத்தின் தந்தை என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறியது

பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில், அவர் தனது கிராமத் தலைவரிடமிருந்து ‘காவ்ன் புரா’ சான்றிதழை சமர்ப்பித்திருந்தார், அது அவருக்கு பெற்றோர் மற்றும் பிறந்த இடம் என்று பெயரிட்டது. அதை தீர்ப்பாயமோ நீதிமன்றமோ ஏற்கவில்லை.

ஜபீதா பேகத்தின் இந்த துயரை துடைக்க உதவிய கிராமத்தின் தலைவரான கோலக் கலிதா கூறுகையில், “நான் ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டேன், நான் அவரை அறிவேன் என்று சொன்னேன், மக்கள், குறிப்பாக திருமணமான பெண்கள் கணவரின் ஊரில் வசிக்கும்போது பிறந்த இடத்தை நிரூபிக்க ‘காவ்ன் புரா’ சான்றிதழை வழங்குகிறோம், ஜபீதா பேகம் சட்டப்பூர்வ குடிமகள் தான் என்று உறுதி அளித்தேன் … ” என்றார்.

கவுகாத்தி உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார், அங்கும் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தால் மட்டுமே தனக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பும் அவர், கோடிகள் செலவு செய்து சவாலை சந்திக்க முடியாவிட்டாலும் தன்னிடம் இருந்த சொற்ப இடத்தையும் தனது சட்ட போராட்ட பயணத்திற்க்காக விற்றுவிட்டு, தற்பொழுது நாள் ஒன்றுக்கு ரூ. 150 கூலிக்கு வேலை செய்துகொண்டிருக்கிறார்.

அஸ்ஸாமில் சட்டவிரோத குடியேறிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட பலரை போல ஜபீதா பேகமும் ஒருவர். இவர்களில் பெரும்பாலானோர் அன்றாட வாழ்க்கைக்கு ஒருபுறம் போராடும் ஏழ்மை நிலையிலும், மறுபுறம் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளப்படுத்தும் ஒரு முயற்சி அசாமில் மட்டும் 19 லட்சம் பேரை தேசிய குடியுரிமை பதிவேட்டில் இருந்து நீக்கி இருப்பது பலருக்கு மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.