வுகாத்தி

சாம் இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக மூங்கில் பாட்டில்கள் கண்டு பிடித்துள்ளார்..

பிளாஸ்டிக் என்பது சுற்றுச்சூழலைப் பாதித்து வருவதாக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.   பல மாநிலங்களில் மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் உபயோகத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் அனைத்து பிளாஸ்டிக்குகளும் மறு சுழற்சி செய்யப்படுவதில்லை என்பதாகும்.  இதற்கு குடிநீர் பாட்டில்களைச் சொல்ல முடியும்.

குடிநீர் தீர்ந்த உடன் இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசி எறியப்படுகின்றன.   இதில் ஒரு சில மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.   மற்றவை அப்படியே விட்டு விடப்படுகின்றன.   பிளாஸ்டிக் மட்கும் பொருள் அல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்   எனவே மட்காத இத்தகைய பாட்டில்கள் சுற்றுச் சூழலைப் பாதித்து வருகின்றன.

இதை தவிர்க்க அசாமை சேர்ந்த திரிதிமன் போரா என்னும் தொழிலதிபர் மூங்கிலால்  செய்யப்பட்ட பாட்டில்களைக் கண்டு பிடித்துள்ளார்.   இந்த பாட்டில்கள் ஒழுகாது.  அத்துடன் பல மாதங்களுக்கு இந்த பாட்டில்களில் நீரைப் பிடித்து வைத்து பயன்படுத்த முடியும்.   இந்த  பாட்டில்கள் கார்க்கினால் ஆகிய மூடியைக் கொண்டதால் வெளிக் காற்று உட்புக வாய்ப்பில்லை.

இந்த பாட்டில்கள் உருவாக்கப்படும் போதே பாக்டீரியாக்கள் ஏதும் இல்லாத நிலையில்  உருவாக்கப் படுகின்றன.  இதனால் இந்த பாட்டில்களில் நீரைச் சேகரித்து வைப்பது பாதுகாப்பானது எனக் கூறப்படுகிறது.   அது மட்டுமின்றி இதில் பிடித்து வைக்கப்படும் நீர் குளிர்ந்த நிலையில் எப்போதும் இருக்கும் என்பது மேலும் ஒரு நன்மை ஆகும்.

அத்துடன் இந்த பாட்டில்களை இரண்டு வாரத்துக்கு ஒரு முறை பிரஷ் மூலம் சுத்தம் செய்து கழுவி வைத்தால் மீண்டும் உபயோகிக்க முடியும்.  அத்துடன் இது உடைந்த பிறகு தூக்கி எறியப்பட்டாலும் சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் உண்டாகாது.  இந்த பாட்டில்கள் ரூ.450 முதல் ரூ. 700 விலையில் கிடைக்கின்றன.