17 நாட்களாகியும் கைது நடவடிக்கை இல்லை : கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி மனைவி கண்ணீர்

நொய்டா

த்திரப்பிரதேசம் புலந்த்ஷகர் கலவரத்தில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி வழக்கில் கொலையாளிகள் 17 நாட்களாகியும் கைது செய்யப்படாததற்கு அவர் மனைவி வருத்தம் தெரிவித்துள்ளார்

உத்திரப் பிரதேசத்தில் உள்ள புலந்த்ஷகர் பகுதியில் ஒரு பசு கொல்லப்பட்டதால் சாலை மறியல் நடந்தது. அதன் பிறகு அந்த மறியல் பெரும் கலவரமாக மாறியது. கலவரத்தில் பல காவல்துறை வாகனங்கள் எரிக்கப்பட்டன. கலவரக்காரர்களால் காவல்துறை ஆய்வாளர் சுபோத்குமார் சிங் கொல்லப்பட்டார், அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார்.

இந்த கலவரத்துக்கு காரணமானவர் என கருதப்படும் யோகேஷ் ராஜ் என்னும் பஜ்ரங் தள் தொண்டர் மற்றும் பாஜக தொண்டரான ஷிகார் அகர்வால் உட்பட 27 பேர்களில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நொய்டாவில் வசித்து வரும் சுபோத்சிங் மனைவி ரஜினி சிங் மிகவும் வருத்தம் அடைந்துள்ளார்.

ரஜினி சிங், “என் கணவர் கொல்லப்பட்டு 17 தினங்கள் ஆகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கலவர வீடியோக்களின் மூலம் இந்த கலவரத்தில் முக்கிய பங்கு உள்ள பாஜக தொண்டர் ஷிகார் அகர்வால் மற்றும் பஜ்ரங் தள் தொண்டர் யோகேஷ் ராஜ் ஆகியோர் சுதந்திரமாக உலவி வருகின்றனர். காவல்துறை இவர்களை ஏன் கைது செய்யவில்லை என்பது குறித்து எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நான் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து எனது துயரத்தை பகிர்ந்துக் கொண்டேன். அப்போது எனக்கு ஆறுதல் அளித்த யோகிஜி என் கணவரைக் கொன்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார் என உறுதி அளித்தார். ஆனால் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. நான் யோகிஜி யை சந்தித்து அவர்கள் ஏன் கைது செய்யப்ப்டவில்லை என கேட்க விரும்புகிறேன்.

இந்த வழக்கில் கைது நடவடிக்கைகள் எடுக்காததால் குற்றவாளிகள் குற்றத்துக்கான சாட்சியங்களை அழித்து விடலாம் என நான் அஞ்சுகிறேன். இந்த சம்பவம் நடந்த அன்று என்ன நடந்தது என்பதை யாரும் தெரிவிக்கவில்லை. மொத்தத்தில் என் கணவரை கொன்றவர்களை கைது செய்யாமல் இருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.