சென்னை:

மிழக சட்டசபையில்  சட்டசபை மானிய கோரிக்கை விவாதக்கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது.  இன்றைய கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி, அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி பதவி விலகும் வரை சட்டப்பேரவையை திமுகவினர் புறக்கணிப்போம் என  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஸ்டெர்லைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு குறித்து, முதல்வர் அறிக்கை யில் விவரமாக தெரிவிக்கவில்லை. எனவே முதல்வர் பதவி விலகும் வரை சட்டப்பேரவையை புறக்கணிப்போம் என்றும்,   முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் தி.மு.க பங்கேற்காது என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

மேலும்,  முதலமைச்சரின் விளக்க அறிக்கையில் துப்பாக்கிச் சூடு என்கிற வார்த்தையே இல்லை, துப்பாக்கிச் சூடு என்கிற வார்த்தையை பயன்படுத்தாதது ஏன்? என்றும், அமைச்சரவை கூட்டத்தை கூட்டி கொள்கை முடிவு எடுத்த பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடினால்தான் அதற்கு பயனுண்டு என்றும் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய  துப்பாக்கிச்சூட்டுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.