சென்னை:
ட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய அதிமுக உறுப்பினர் செம்மலை, முரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் குரல்கொடுத்தனர்.
இதேபோல அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா விஞ்ஞான ரீதியான ஊழல் செய்பவர் கருணாநிதி என சர்க்காரிய கமிஷன் கூறியுள்ளதாக தெரிவித்தார். இதனால் ஆத்திரமான தி.மு.க.வினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
ஆளுநர் உரையை அம்மா காலண்டர் என சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியதற்கு விளக்கம் அளித்தார் செம்மலை. எதிர்காலத்தில் அரசு செய்ய உள்ள திட்டங்களின் பட்டியலையே காலண்டர் என்ற வார்த்தை குறிக்கும். ஆகவே  ஸ்டாலின் கூறியது பொருத்தமானதே என்று அவர் கூறினார்.
02
மேலும் அவர், “தி.மு.க.  தலைவர் கருணாநிதியை கண் தெரிந்தவர்கள் பாராட்டுவார்கள் என்றும், கண் தெரியாதவர்கள் பாராட்ட மாட்டார்கள்” என்றும் செம்மலை கூறினார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பேசிய செம்மலை, “கருணாநிதி தனது குடும்ப வாரிசுகளுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பது ஏன்?  முரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி” என்றார்.
கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
“அவையில் இல்லாதவர் குறித்து பேசக்கூடாது” என்று  திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதற்குப் பதில் அளித்த  செம்மலை, “கருணாநிதி சட்டசபை உறுப்பினர் என்பதால், அவர் அவையில் இல்லாவிட்டாலும் அவரைப்பற்றி பேசலாம்” என்றார்.
அப்போது எழுந்த அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம், “செம்மலை பேசியதில் தவறு இல்லை . கருணாநிதியை பற்றி பேசும் போது அவரது பெயரை கூறாமல் வேறு எப்படி பேசுவது” என்று கேட்டார்.
கருணாநிதியின் பெயரை குறிப்பிட எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அப்போது சபாநாயகர் தனபால், “எந்த பொறுப்பிலும் இல்லாத ஒரு உறுப்பினரின் பெயரை சொல்லித்தான் பேச முடியும்” என்றார்.
இதற்கு தி.மு.க. உறுப்பினர் துரைமுருகன், “இதேபோல முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை நாங்கள் கூறலாமா” என்று கேட்டார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் மேலும் கூச்சல் ஏற்பட்டது.
அடுத்ததாக அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசும் போது, “விஞ்ஞான ரீதியான ஊழல் செய்பவர் கருணாநிதி என சர்க்காரிய கமிஷன் கூறியுள்ளது” என்றார்.
இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜன் செல்லப்பா பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக சென்று முழக்கமிட்டனர், இதனால் அவை மீண்டும் அமளி துமளியானது. ஆனால் பெரும் அமளிக்கிடையேயும் விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.