சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் அபுபக்கர், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

திமுக கூட்டணியில்  காங்கிரஸ் கட்சி,  விடுதலை சிறுத்தைகள்,  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  கொங்கு மக்கள் தேசிய கட்சி,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐக்கிய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில்போது இணைந்து போட்டியிட்டன. தற்போதுவரை திமுக கூட்டணி தொடர்ந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலிலும் திமுக மெகா கூட்டணி தொடரும் என்றும்,  இணைந்தே தேர்தலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித்தலைவர் அபுபக்கர், திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகவும், நாங்கள் கொள்கை ரீதியாக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம், கூட்டணியில் பேரம் பேசமாட்டோம் என்று கூறியவர்,  கடந்த சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் போட்டியிட்டோம் என்பதாகவும் தெரிவித்தார்.