சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு! பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல்  கூட்டணி குறித்து ஜனவரியில் தான் முடிவு செய்யப்படும் என தேமுதிக கட்சியின் பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்,  “தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தான் முடிவு செய்யப்படும்” என்றார்.

தற்போதைய நிலையில், நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கின்றோம் என்று கூறியவர், எங்களது அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதம் இறுதி அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் கட்சியின் செயற்குழுவில் தான் இறுதி முடிவு செய்யப்படும் என்றார்.  எதுவாக இருந்தாலும்,  எங்க கட்சியின் தலைவர்  கேப்டன் தான் முடிவை அறிவிப்பார் என்றார்.

பாஜகவின் தடையை மீறிய வேல் யாத்திரை தொடர்பான கேள்விக்கு,  அவரது யாத்திரையால்  மக்களுக்கு பாதிப்பு இல்லை எனில் எந்த பிரச்சினையும் இல்லை. அதே வேளையில் மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் தமிழக அரசு தான் முடிவு செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

விஜயகாந்தின் உடல்நிலை குறித்த கேள்விக்கு,  கேப்டன் விஜயகாந்த் தற்போது நலமுடன் உள்ளார். நீங்கள் எல்லாம் அவரை தேர்தல் பிரச்சாரத்தின் போது பார்க்கலாம் என்று கூறினார்.