டெல்லி: பீகார் மாநிலம் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இன்றுமதியம் பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை  ஒப்புதல் வழங்கி உள்ளது.

இன்று மதியம் பிரதமர் தலைமையில் கேபினட் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,  பீகாரில் உள்ள தர்பங்காவில் புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) அமைக்க  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிதாக அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கைகள் திறன் கொண்ட ஒரு மருத்துவமனை இருக்கும், அதில் அவசர படுக்கைகள், ஐ.சி.யூ படுக்கைகள், ஆயுஷ் படுக்கைகள், தனியார் படுக்கைகள் மற்றும் சிறப்பு மற்றும் சூப்பர் சிறப்பு படுக்கைகள் ஆகியவை அடங்கும்.
மேலும் ஒரு நாளைக்கு வெளி நோயாளிகள் 2 ஆயிரம் பேரும், உள் நோயாளிகள் மாதத்துக்கு 1000 பேரும் சிகிச்சை பெறலாம். புதிய எய்ம்ஸில் 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 60 பி.எஸ்.சி (நர்சிங்) இடங்கள் இருக்கும். மேலும் 15-20 பல்நோக்கு மருத்துவ துறைகள் இருக்கும். முதுநிலை மருத்துவ படிப்புகளும் தொடங்கப்படும்.
ரூ.1264 கோடி செலவில் கட்டப்படும் இந்த எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி கழகம், மத்திய அரசு ஒப்புதல் அளித்த தேதியிலிருந்து 48 மாத காலத்திற்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.