தேர்தல் முடிவுகள் பிரதமருக்கு கிடைத்த அடி : குஜராத் முன்னாள் முதல்வர்

காந்திநகர்

டந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பிரதமருக்கு கிடைத்த ஒரு அடி என முன்னாள் குஜராத் முதல்வர் சங்கர்சிங் வகேலா தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பல தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக தற்போது ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் பெரும்பான்மை அடைய முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து பல தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா செய்தியாளர்களிடம், “தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி மக்களிடம் ”மோடி”க்காக வாக்களிக்க வேண்டும் எனவும் வசுந்தர ராஜே, சிவராஜ் சவுகான் போன்ற உள்ளூர் தலைவர்களுக்காக வாக்களிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். எனவே இந்த தேர்தலுக்கு மோடிதான் முழுப் பொறுப்பாவார். ஆகவே இந்த தேர்தல் முடிவுகளுக்கு வசுந்தரராஜே மற்றும் சிவராஜ் சவுகான் பொறுப்பு இல்லை.

ஒரு பிரதமர் என்பவர் நாட்டை நடத்த வேண்டுமே தவிர தனது கட்சிப் பிரசாரத்துக்காக நாடெங்கும் அரசுப் பணத்தில் பயணம் செய்யக் கூடாது. ஆனால் நமது பிரதமர் தேர்தல் சுற்றுப்பயணம் செய்வதோடு பல வாக்குறுதிகளையும் அளிக்கிறார். உதாரணமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் தினத்தன்று ராமர் கோவில் கட்டுவோம் என வாக்களிக்கிறார். இது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்ற செய்யும் திட்டமாகும்.

மக்கள் பாஜகவின் விளையாட்டுக்களை புரிந்துக் கொண்டு விட்டனர். இனியும் அவர்களை ஏமாற்ற முடியாது. பணமதிப்பிழப்பு, ஜி எஸ் டி ஆகியவைகளால் மக்களை துன்புறுத்திய மோடி அரசுக்கு மக்கள் தற்போது பதில் அளித்துள்ளனர். பணமதிப்பிழப்பின் போது நடந்த மரணங்களுக்காக மோடி மீது கொலை வழக்கு தொடர வேண்டும். இந்த தோல்வி மக்கள் மோடிக்கு முகத்தில் கொடுத்த அடி ஆகும்” என தெரிவித்துள்ளார்.