டில்லி:

அரசியல்வாதிகளின் சொத்துக் குவிப்பு விஷயத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்த தகவல்கள் தங்களுக்கு நிறைவானதாக இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த விஷயத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறிக்கையாக கொடுக்கும்படி உத்தரவிட்டது நீதிமன்றம். இரு தேர்தல்களுக்கு இடையில் அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு 500 சதவீதம் வரை அதிகரித்துவிடுவதாக நீதிமன்றம் கூறியது.

தேர்தலில் வெற்றிபெற்றவுடன் அரசியல்வாதிகள் சொத்துக்கள் உடனே அதிகரிப்பது பற்றி வருமான வரித்துறை உடனடியாக ஏன் விசாரிப்பதில்லை. மேலும், தேர்தலின் போது காட்டப்படும் சொத்துக்கள், தேர்தலுக்கு பின் அதிகரிப்பது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது பற்றி விளக்க வேண்டும். சொத்து விவரங்களை ஒப்பிட என்ன வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது

அரசியல்வாதிகள் தங்களது சொத்து விவரங்கள், குடும்பத்தினரின் சொத்து விவரங்கள் ஆகியவற்றை குறிப்பிடுகின்றனர். ஆனால் வருமான மூலத்தை குறிப்பிடுவதில்லை என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.