அஷ்டமத்தில் சனியும் ஒன்பதுல குருவும் – ஏழுமலை வெங்கடேசன்

 

நெட்டிசன்:

ரு கிரிமினலை பிடித்தால் சம்மந்தபட்ட குற்ற விவகாரத்தில் அவன் மட்டுமின்றி வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது உட்பட பல விஷயங்களை தோண்டியெடுக்காமல் சாதாரண ஏட்டய்யாகூட விடமாட்டாரு..

ஆனால் பல பெரிய வழக்குகளில் மட்டும் இந்த தோண்டும் விவகாரம் கமுக்கமாக புதைக்கப்பட்டுவிடுகிறது என்பதுதான் கொடுமை.

20 ஆண்டுகளாக நடந்து சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகாரன் ஆகிய நான்கு பேருக்கும், கீழ் நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்திருக்கிறது..

நான்கு ஆண்டு சிறை என்பதோடு ஜெயலலிதாவுக்கு நூறுகோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவுக்கு போயிருக்கிறது நிலைமை. போகட்டும், நேரடியாக விஷயத்துக்கு வருவோம்.

மனசாட்சி, சட்டம் என எதைப்பற்றியுமே கவலையேபடாமல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து நால்வரும் கோரத்தாண்டவம் ஆடியிருக்கிறார்கள் என்கிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு..

ஜெயலலிதா உள்ளிட்டோர் கோடிகோடியாய் குறுக்குவழியில் குவித்திருக்கிறார்கள் என்றால் அந்த குறுக்கு வழிகள் என்னென்ன? அமைச்சர்கள் மற்றும் அரசின் மிக மூத்த அதிகாரிகளின் உதவியில்லாமல் ஜெயலலிதாவே நேரடியாக பணம் சேர்த்திருக்கமுடியுமா?

அப்படி ஜெயலலிதாவின் உத்தரவுக்கு கட்டுப்பாட்டு முறைகேடாக பணம் சேர்க்க உதவியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் வெறுங்கையுடனா போயிருப்பார்கள்? நிச்சயம் இருக்கவே முடியாது.

1991-96 கால கட்டத்தை புரட்டினால் பல சுரண்டல் விஷயங்களுக்காக எத்தனை துறை செயலாளர்களின் பெயர் தாறுமாறாக நாறியது என்பதை அறியலாம்..

இதைத்தான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறோம்.. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார்கள் என்பதோடு, எந்ததெந்த முறைகேடான வழிகளில் யார்யாரெல்லாம் உள்வட்டம் அமைத்து பணத்தை சுரண்டினார்கள் என்பதை இன்னொரு பக்கம் புலனாய்வு செய்திருக்கவேண்டியது மிகவும் அவசியம்.

அப்படி செய்திருந்தால் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் உடந்தையாக இருந்த இரண்டாம்கட்ட பார்ட்டிகளை சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் அதனை விட்டுவிட்டதால் அவர்கள் அனைவரும் தாங்கள் கொள்ளையடித்த பணத்துடன் ரொம்ப வசதியாகவே தப்பிவிட்டார்கள்.

கடைசியில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மாட்டிக்கொண்டார்கள்.. இதில் ஜெயலலிதா குற்றவாளி என மீண்டும் உறுதிபடுத்தப்படுவதற்குள் இறந்தேபோய்விட,.சசிகலா தண்டனை கைதியாகி சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார்.

பல கொலைகளை செய்த சந்தன கடத்தல் வீரப்பன், கோடிகோடியாய் சம்பாதித்தான் என்று சொல்லப்பட்டது. அப்படிப்பட்ட வீரப்பன் எப்போதுமே  சொகுசாக வாழவில்லை.. அவன் பிள்ளைகள்கூட ஆடம்பரத்தில் புரளவில்லை. வெளியே வந்து பணத்தோடு புரண்டு அமோகமாக வாழ முடியாமல் வீரப்பன் கடைசிவரை காட்டிலேயே தலைமறைவாக திரிந்தான்.

அவனே கோடிகோடியாய் சம்பாதித்தான் என்றால் அவனை வைத்து எத்தனையோ அரசியல்வாதிகள், அதிகாரிகள் அதைவிடங்கு பல மடங்கு அதிகமாய் சம்பாதித்திருப்பார்களா இல்லையா?

வீரப்பனை உயிரோடு பிடித்து சட்டத்தின்முன் நிறுத்தியிருந்தால் இது பற்றிய பல விவரங்களை அவன் சொல்லியிருக்கலாம், ஆனால் கமுக்கமாக வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டான்..

அவனை வைத்து சம்பாதித்தவர்கள் நாட்டில் சொகுசாகத்தானே வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.. அவர்களெல்லாம் யார் யார்? அவர்கள் பற்றிய விவரங்களை தோண்டியெடுக்க ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா? ஒரு பதிலும் வரப்போவதில்லை..

வசமாக மாட்டிக்கொண்டு, போய்ச்சேர்த்த ஏஒன் தலைகளை பார்த்து பரிதாபப்படுவதா, மோசடியில் லாபம் பார்த்துவிட்டு சிக்காமல் போன நிழல் தலைகளை ஆச்சர்யமாக பார்ப்பதா? எல்லாவற்றிற்கும் மேலாக புலனாய்வு புலிகளை நினைத்து பெருமைப்பட்டுக்கொள்வதா?

இவற்றிற்கெல்லாம் நேர்மாறான விஷ்யம்.. ஆந்திராவில் சட்டவிரோதமாய் செம்மரம் வெட்டும் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் பிடிபடுவார்கள்.. சில நேரம் சுட்டுக்கொல்லப்படுவார்கள். ஆனால் இவர்களின் முதலாளிகள் என்றைக்குமே சிக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு ‘கடவுள்’ அளித்த அற்புத வரம் அது.

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு என்பார்கள். அதெல்லாம் வேண்டாம், கவுண்டமணி டயலாக்கில் சொன்னால்…சத்திய சோதனை !!!