ண்டன்

ந்திய சீரம் கல்வி நிலையத்துடன் இணைந்து பிரிட்டன் நாட்டின் ஆஸ்டிராஜெனிகா நிறுவனம்  200 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க உள்ளது.

சீனாவில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.   அந்த வைரஸ் உலகெங்கும் பரவி மக்களைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில்  66.92 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இதில் 3.92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  இந்த வைரஸுக்கு தடுப்பூசி கண்டறிய அனைத்து நாடுகளும் ஈடுபட்டுள்ளன.

இதில் பிரிட்டனின் ஆஸ்டிராஜெனிகா நிறுவனம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டு பிடித்துள்ளது.  இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த தடுப்பூசி நல்ல பலனை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.    இந்த தடுப்பூசியைப் பிரேசில் நாடு சோதனை வடிவில் ஏற்றுக் கொண்டுள்ளது.  கொரோனா பாதிப்பில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஆஸ்டிராஜெனிகா நிறுவனம் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகளுக்கு 40 கோடி தடுப்பூசிகள் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.   இந்திய சீரம் கல்வி நிலையத்துடன் நேற்று இந்த நிறுவனம் ஒரு ஒப்பந்தம் இட்டுள்ளது.  இந்த ஒப்பந்தத்தின்படி நிறுவனம் குறைந்த மற்றும் மத்திய வருமானம் உள்ள நாடுகளுக்கு இந்த வருடம் 100 கோடி தடுப்பூசிகளும் அடுத்த வருடம் 100 கோடி தடுப்பூசிகளுமாக மொத்தம் 200 கோடி தடுப்பூசிகள் வழங்க உள்ளது.

இது குறித்து இந்த கல்வி நிலைய தலைமை அதிகாரி அடார் பூனாவாலா, “ஆஸ்டிராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியா உள்ளிட்ட குறைந்த மற்றும் மத்திய ரக ஊதிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியைக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  கடந்த 50 வருடங்களாக தடுப்பூசி உருவாக்குவதில் நமது நிலையம் உலகப்புகழ் பெற்றுள்ளது.  நாம் இனி இந்த நிறுவனத்துடன் இணைந்து அனைத்து நாடுகளுக்கும் சரியான முறையில் தடுப்பூசி விநியோகத்தை  கவனிக்க உள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.