டில்லி:

தேர்தல் முடிவுகளை கணித்து வெளியிடக்கூடாது என ஜோதிடர்களுக்கு தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலின்போது, வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் செய்திதாள், தொலைக்காட்சிகளில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதுபோல வெற்றி வாய்ப்பு குறித்த கருத்துக் கணிப்போ, ஆய்வோ நடத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தடை செய்திருந்தது.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மதிக்கப்படாமல்,  முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறும்போதே சில செய்தி நிறுவனங்கள், ஜோதிடர்களை கொண்டு வேறுமாதிரியான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டனர்.

இது தேர்தல் ஆணையத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜோதிடர்களை கொண்டும் கருத்து கணிப்பு வெளியிட தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

”தேர்தலின்போது, கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்பட்ட காலத்தில், ஜோதிடர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்களை வைத்து, கணிப்புகளை வெளியிடுவது சட்டதுக்கு புறம்பானது என்றும், மீறும்   நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.