சென்னை:

மிழக அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பை மீறி ஐபிஎல் போட்டி இன்று சென்னையில் நடைபெறுவதையொட்டி, இன்று செய்தியாளர்களை சந்தித்த பாரதிராஜா உள்பட தமிழ் அமைப்பினர், மாலை 5 மணிக்கு அண்ணாசாலையில் கூட இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், அதன்பிறகு என்ன நடக்கப்போகிறது என்பதை அப்போது தெரிந்துகொள்ளலாம் என்றும் டுவிட்ஸ்ட் வைத்து பேசினார்.

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக,  தமிழகத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் என பல தரப்பினரும் போராடிவருகின்றனர். காவிரிக்காக தமிழர்கள் போராட்ட களத்தில் ஒன்றி ணைந்துள்ள இந்த நேரத்தில், ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது, இது மக்களை திசை திருப்பிவிடும் என அரசியல் கட்சியினர் உள்பட தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஏற்கனவே, நாம் தமிழர் கட்சி சீமான், வேல்முருகன் போன்றோரும், இயக்குனர் பாரதிராஜா, சத்யராஜ், அமீர், தங்கர்பச்சன், வெற்றிமாறன், ராம் போன்ற திரையுலக பிரமுகர்களும்,  சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது என  எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று சென்னை தேனாம்பேட்டையில், பாரதிராஜா, அமீர், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன், தமிமுன் அன்சாரி, தங்கர் பச்சன், தனியரசு உள்ளிட்டோர் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, கட்சி மற்றும் அமைப்புகளை கடந்து தமிழர்களாக இன்று மாலை 5 மணிக்கு ஐபிஎல் போட்டிக்கு எதிராக சென்னை அண்ணா சாலையில் ஒன்று கூடி போராட இருப்பதாக தெரிவித்தனர்.

என்ன மாதிரியான போராட்டம் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பாரதிராஜா, நான் சண்டைக்கு போகும்போது கத்தியை ஒழிச்சு வச்சுருப்பேன்.. நீங்க வந்து, கத்தியை எங்கே வச்சுருக்கீங்கனு கேட்டா, நான் எப்படி சொல்வேன் என பதிலளித்தார்.

மேலும், எங்களது நடவடிக்கைகள் என்ன என்பதை அப்போது தெரிந்துகொள்ளுங்கள் என்றும் கூறினார்.

இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இதன் காரணமாக சேப்பாக்கம் மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.