At 80, this incredible TN athlete is long-jumping her way in to our hearts

 

இந்தியச் சமூகத்தில் 80 வயது பெண்மணியின் வாழ்க்கை என்னவாக இருக்கும்?

பெரும்பாலும் படுக்கையில்… அல்லது மூலையில் கிட என்ற பிள்ளைகளின் எரிச்சல் மிகுந்த எச்சரிக்கைக்கு அடங்கி ஒரு மூலையில்…

கொஞ்சம் வசதியான பின்னணி உள்ளவர்கள் , பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் முதியோர் இல்லங்களில்… என தங்களது முகங்களையும், முகவரிகளையும் தங்களுக்குள்ளேயே அடி ஆழத்தில் புதைத்துக் கொண்டு ஒடுங்கிக் கிடப்பார்கள்..

ஆனால், கோவையைச் சேர்ந்த 80 வயதை எட்டிய ஹோமியோபதி டாக்டர் வசந்தா சாமுவேல் அப்படி அல்ல…

வரும் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற உள்ள மூத்தோருக்கான மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன் போட்டிகளில் பங்கேற்க தயாராகி வருகிறார்.

வசதந்தா சாமுவேலின் கதை, சராசரிப் பெண்களுடையதைப் போன்றது அல்ல… தங்களால் இனி என்ன முடியும் என மெனோபாஸ் பருவத்திலேயே சோர்ந்து விழும் நமது சமூகத்து சராசரிப் பெண்களுக்கு, அதற்குப் பிறகுதான் வாழ்க்கையின் அர்த்தமுள்ள பகுதி மீதமிருக்கிறது என்ற உத்வேகத்தையும், உயிர்ப்பையும் அளிக்கக் கூடிய உன்னதமான வாழ்க்கைப் பாடம்!

ஆம்… கணவருடன் இணைந்து ஹோமியோபதி மருத்துவத்தை பார்த்துக் கொண்டிருந்த வசந்தாவுக்கு அப்போது வயது 49. 1986ஆம் ஆண்டு அது. குடும்ப நண்பர் ஒருவரைச் சந்தித்த போதுதான் நீளம் தாண்டுதல், குதித்தல், சாட்பூட் என பல்வேறு விளையாட்டுகளிலும் டாக்டர் வசந்தாவுக்கு இருந்த திறமை பற்றி பேச்சு வந்தது. அந்த சந்திப்புதான் அவரது வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதே ஆண்டு கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மூத்தோருக்கான (மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ்) சாட்பூட், உயரம்தாண்டுதல் உள்ளிட்ட மூன்று வகைப் போட்டிகளில் பங்கேற்றார் வசந்தா. மூன்று போட்டிகளிலும் மூன்றாவது இடத்தில் வந்தார். அடுத்தபடியாக, மதுரையில் தேசிய அளவில் நடைபெற்ற உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று இரண்டாவது இடங்களைப் பெற்றார். 1987ல் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியாவுக்கான மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். அப்போதுதான் தனக்கு சரியான பயிற்சியாளர் தேவை என்பதை வசந்தா உணர்ந்தார். யாரைத் தேடுவது? நானே பயிற்சி தருகிறேன் என்று 15 வயதே ஆன இளம்தடகள வீரரான வசந்தாவின் மகனே முன்வந்துள்ளான்.

மகன் ஆசிரியனானான். தாய் மாணவியானார். ஸ்டான்ஸ் பள்ளி நிர்வாகத்தினர், தங்களது விளையாட்டு மைதானத்தில் வசந்தா பயிற்சி பெற அனுமதி வழங்கினர். (இப்போதும் அந்த இலவச அனுமதி தொடர்கிறது) தாயும், மகனும் மேற்கொண்ட கடும் முயற்சிக்கு பலன் கிட்டியது. ஆம். சிங்கப்பூரில் நடைபெற்ற அந்த மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் போட்டியில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்றார் வசந்தா சாமுவேல் .அதன் பிறகு வசந்தா சாமுவேலின் வாழ்வில் வெற்றிகளும், பதக்கங்களும் குவிந்தன.

1991ஆம் ஆண்டு நேர்ந்த அந்த அனுபவத்தை தற்போது பெருமிதத்துடன் நினைவு கூர்கிறார் வசந்தா சாமுவேல். பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் போட்டியில் போல் வால்ட் (தடியூன்றித் தாண்டுதல்) விளையாட்டில் பங்கேற்றார். அதற்கு ஏற்ற வளையும் தன்மை கொண்ட உயரமான கம்பு அவருக்கு கிடைக்கவில்லை. கணவரே தயாரித்துத் தந்த மூங்கில் கம்பை அவர் போட்டியில் பயன்படுத்துவதற்காக எடுத்துச் சென்றார். அந்தப் போட்டியில் அவர் 5ஆவது இடத்தில்தான் வந்தார். ஆனாலும், அதற்காக வசந்தா சாமுவேல் எடுத்துக் கொண்ட கடும் முயற்சியைப் பாராட்டி, பின்லாந்து அரசு அவருக்கு, உயரம் தாண்டப் பயன்படும் இரண்டு பைபர் கம்புகளை பரிசாக வழங்கியது. இந்தத் தகவல் அப்போது அமெரிக்க அதிபர் ஹெச்.டபுள்யூ. புஷ் வரை சென்றடைந்தது. இதன் எதிரொலியாக  வசந்தா சாமுவேலின் விளையாட்டு ஆர்வத்தையும், பங்களிப்பையும் பாராட்டி, அமெரிக்காவின் விளையாட்டுக்கான அதிபர் விருது அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ்ஷின் கையெழுத்திடப்பட்ட அந்த விருதுக்கான சான்றிதழை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார் வசந்தா சாமுவேல். அமெரிக்க அதிபர் விருதுக்கான அந்தப் பதக்கத்தை பல ஆண்டுகள் எப்போதும் தமது நெஞ்சிலேயே குத்திக்கொள்ளும் பழக்கத்தை வைத்திருந்ததாகவும் வசந்தா சாமுவேல் கூறுகிறார்.

போல் வால்ட்டில் வசந்தா சாமுவேல் தங்கம் வெல்ல வேண்டும் என்பது கணவர் சாமுவேலின் கனவாக இருந்துள்ளது. 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் போட்டியில் போல் வால்ட்டில் பங்கேற்று வசந்தா தங்கம் வென்ற போது, அதைப் பார்த்து மகிழ கணவர் சாமுவேல் உயிருடன் இல்லை. 2000ல் நிகழ்ந்த ஒரு ஸ்கூட்டர் விபத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். கணவரின் கனவுகளைத் துரத்தி வென்ற படியே, 80 வயதைக் கடந்த மாஸ்டர்ஸ் சாம்பியன் போட்டிகளில் பங்கேற்க தற்போதும் தயாராகி வருகிறார் வசந்தா சாமுவேல். தமது மூன்று பிள்ளைகளும் சளைக்காமல் தரும் ஆதரவே தனது அதிசயிக்கத் தக்க வெற்றியின் பின்னணி என்கிறார் வசந்தா.

“மாவட்ட, தேசிய அளவிலான எந்தப் போட்டிகளையும் நான் தவறவிடுவதில்லை. சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஸ்பான்சர்கள் இருந்தால் மட்டுமே செல்கிறேன். இப்போது சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் போட்டியில் பங்கேற்க 80 ஆயிரம் ரூபாய் வரை ஸ்பான்சர் தயாராகிவிட்டது. நாட்டுக்கு மெடல் வாங்க நமது கைக்காசை ஏன் செலவு செய்ய வேண்டும்?” எனக் கேள்வி எழுப்புகிறார் வசந்தா சாமுவேல்.

80 வயதிலும் இடையறாது குதித்தும், தாவியும் பதக்கங்களைக் குவிக்கும் இந்த வீராங்கனைக்கு, பல நாடுகளின் பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்தாலும், இதுவரை நமது மாநில, மத்திய அரசுகள் எந்த கவுரத்தையும் அளிக்கவில்லை என்ற உண்மை கசப்பானது மட்டுமல்ல, அருவெறுப்பானதும் கூட!