பெங்களூரு

பெங்களூரு நகரில் உள்ள பென்சன் டவுன் வாக்குச் சாவடியில் ஒரு அதிகாரி பாஜகவுக்கு வாக்களிக்க கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

                          நண்பருடன் சையத் ஜாகிர்

மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவான இன்று பெங்களூரு நகரில் வாக்குப்பதிவு நடந்தது. இன்று காலை 7மணிக்கு இங்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.  மத்திய பெங்களூரு தொகுதியில் உள்ள பென்சன் டவுன் வாக்குச் சாவடியில் இன்று வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மதியம் சுமார் 12.30 மணி அளவில்  அந்தப் பகுதியின் வாக்காளரான சையத் ஜாகிர் வாக்களிக்க வந்துள்ளார்.  அந்த வாக்குச்சாவடியின் பெண் அதிகாரி அங்கிருந்தவர்களிடம் இரண்டாம் எண்ணை அழுத்த வேண்டும் என வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை ஜாகிர் தட்டிக் கேட்டதால் அங்கு தகராறு மூண்டுள்ளது.

அந்த தொகுதியில் இரண்டாம் எண் பாஜகவுக்கு உரியதாகும். இந்த இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த காவலர்கள் வந்துள்ளனர்.   காவலர்கள் உடனடியாக தேர்தல் அதிகாரிக்கு தகவல் அளித்துள்ளார். அவர் அங்கு வந்து அந்த பெண் அதிகாரிக்கு பதில் வேறொருவரை நியமித்துள்ளார்.

அந்த வாக்காளர் பொய்ப் புகார் தெரிவித்துள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஜாகிர் இந்த விவரங்களை ஒரு வீடியோ பதிவாக்கி வலை தளங்களில் பதிந்துள்ளார்.

இது குறித்து அந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த ஃபகத் என்பவர், “நாங்கள் ஒரு நான்கைந்து பேர் வரிசையில் நின்றிருந்தோம். நாங்கள் ஜாகிர் இடம் அந்த பெண் அதிகாரி இரண்டாம் எண்ணை அழுத்துமாறு கூறியதை கேட்டோம். அதன் பிறகு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. நாங்கள் அந்த பெண் அதிகாரி மிது பொய் புகார் அளிப்பதால் எங்களுக்கு ஒரு லாபமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.