சத்தீஸ்கர் : 3 பச்சிளம் குழந்தைகள் ஆக்சிஜன் ப்ரெஷர் குறைவால் மரணம்…

ராய்ப்பூர்

ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயுவின் அழுத்தம் குறைவால் புதிதாகப் பிறந்த 3 பச்சிளம் குழந்தைகள் இறந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனை பி ஆர் அம்பேத்கார் மருத்துவமனை ஆகும்.  இங்கு நேற்று இரவு புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகள் மூவர் மரணம் அடைந்ததாக செய்தி வந்துள்ளது.

இது குறித்து சுகாதார இயக்குனர் பிரசன்னா தெரிவித்ததாவது :

”நேற்று இரவு திடீரென ஆக்சிஜன் வாயு அழுத்தம் குறைவாக வந்தது.  அதே நேரத்தில், ஆக்சிஜன் இருப்பு குறையவில்லை.   அழுத்தம் குறைந்ததை உடனடியாக கண்டுபிடித்த டூட்டி டாக்டர்கள் மேலதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.  மருத்துவமனை அதிகாரிகள் உடனே சரியான அழுத்தத்தில் ஆக்சிஜன் கிடைக்க தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.  குழந்தைகள் இறந்ததற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.    குழந்தைகளின் மரணம் அவர்களின் உடல்நலக் குறைவால் ஏற்பட்டது” எனக் கூறினார்.

அதே நேரத்தில் ஆக்சிஜன் சப்ளையை கவனிக்கும் ஆப்பரேட்டர் போதையில் இருந்ததாகக் கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  சத்தீஸ்கர் முதல்வர் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, இறந்த குழந்தைகளுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளார். வடக்கு ராய்ப்பூர் தொகுதி எம் எல் ஏ செய்தி அறிந்ததும், மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

இறந்த குழந்தைகளில் ஒன்று பிறந்து 5 நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தை.   அந்தக் குழந்தையின் தந்தை தனது மகனுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும்,  அழுத்தம் குறைந்த ஆக்சிஜனால் தான் மரணம் ஏற்பட்டது எனவும் கண்ணீருடன் கூறியது அனைவர் மனதையும் உருக வைத்தது.